வியாழன், மார்ச் 19, 2020

நேர்கொண்ட பார்வை!


நேர்கொண்ட பார்வை
அன்னையர்க் குலப் பெண் தெய்வமென
ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
புழக்கடைத் தனிலே பூட்டிடுவார்- பெண்ணைக்
கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

முரட்டு உலகின்றுக் காப்பதாய்ச் சொல்லி
இருட்டு வாழ்க்கைத் தந்திடுவார் – மூடர்
குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
புனிதம் என்றே காட்டிடுவார்!
கைவளை அழகென்று சொல்லி – பெண்ணுக்குக்
கைவிலங்கிட்டே முடக்கிடுவார்
கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
முக்காட்டிட்டு அவர் திறம் மூடிடுவார்!
தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
பார்வைத் தீயால் பொசுக்கிவிட
முண்டாசுக் கவிஞனின் வாரிசென
நேர்கொண்ட பார்வை காட்டிடுவாய்…
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக