செவ்வாய், மே 16, 2017

பாதம் கூறும் பாடம்

[வல்லமை இதழின் 111-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
பாதம் கூறும் பாடம்

பெண்ணவளின் பாதத்திற்கு
புது நகைகள் தான் கொடுத்தார்
வெள்ளியில் மிஞ்சியென்றார்
தங்கத்தில் சதங்கை தந்தார்

பிஞ்சு விரல் சொடுக்கெடுத்து
ஆலிவ் எண்ணெய் பூசி வந்தார்
நகக்கீறுத் தனைத்தீட்டி
நளினம் நீயென்றுரைத்தார்.

இத்தனையும் பழக்கி அவளை
இத்தரணி மீதினிலே
போகப்பொருள் ஆக்கிவைத்து
சுயந்தொலைத்து  நிற்கவைத்தார்

பென்னவளின் பாதமலர்
எண்ணிலாத கதைகள் சொல்லும்
விண்ணவரும் பெற்றிடாத
திண்ணமதை தானியம்பும்

சீதையவள் பாதங்களோ
ஸ்ரீராமன் பின் சென்றும்
பெருந்துன்பம்  அடைந்ததொரு
பெருங்காதை நினைவுறுத்தும்

கடவுளையே பின்தொடர்ந்தும்
காரிகையாய் பிறந்தோர்க்கு
கட்டமது நீங்காதென்று
திட்டமாகச்  சொல்லிவிடும்

பாஞ்சாலி பாதங்களோ
பார்த்திபனின் கரம்பிடித்தும்
பலதாரப் பெண்ணென்ற
பரிகாசம் தனையேற்கும்

பலதாரந்தனை மணந்த
பலராமன் உடன்பிறப்பை
பரந்தாமன் எனப்போற்றுவதை
பாரோர்க்குப் பறைந்து நிற்கும்

கண்ணகியின் காற்சிலம்போ
கற்புநிலைக் கற்பித்து
கல்மனதுக்  கணவனையும்
காத்து நிற்க போதிக்கும்

தாழ்வுற்று, வாழ்வதனைத் தானிழந்து
பாழ்பட்டு  நின்றதற்கு
ஆடவனை விடுத்து அவள்
ஊழ்வினையைச் சாடி நிற்கும்..

அகலிகையின் நிலைகூறும்
அருந்ததியைப் பார்க்கச் சொல்லும
நளாயினியின்  கதைச் சொல்லி
வேசியிடம் தூதனுப்பும்

வேண்டா இந்நிலை விடுத்து
தீண்டாமைத் தனைத் துறந்து
முண்டாசு கவிஞனவன்
கண்ட பெண்ணாய் நீ வருவாய்

தடுமாற்றந்தனை விடுத்து
சுயமாற்றந்தனைச் செய்து
புதுப்பாதைத்தனைக் கண்டு
முழுவுருவும் காட்டி நிற்பாய்!!!

5 கருத்துகள்: