ஞாயிறு, டிசம்பர் 16, 2012

மார்கழி வழிபாடு



சமூதாயத்திற்கு நன்மைத் தரும் விஷயங்களை மதத்தில் பிணைத்து மதச் சடங்குகளாகவும் பண்டிகைகளாகவும் கூறுவது நம் நாட்டு வழக்கம். முன்பனிக்காலத்தின் குளிருக்கு முடங்கிவிடாமல் அவர்கள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாய் இருக்கவும் தை மாதத்தின் அறுவடைக்காக விதைத்த நெல்லைப் பாதுகாக்கவும் ஆநிரைகளைப் பராமரிக்கவும் அவர்கள் விடியலில் எழுவது முக்கியம். எனவே அவர்களை விடியலில் எழ வைக்க செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் மார்கழி பாவை நோன்பு.

இதனால் இரண்டு நன்மைகள் ஒன்று லௌகீமான அல்லது புற வாழ்க்கையில் நன்மை. நோயற்ற வாழ்வும் செல்வமும் கிட்டும். மற்றொன்று கடவுள் வழிபாடு; இது அகத்தூய்மைக்கான ஏற்பாடு. மார்கழியில் அதிகாலைத் துயில் நீக்கி, நீராடித் தூய்மையாய் கடவுளை நினைத்து பாடுவது மரபு.

மார்கழிப் பாவை நோன்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பாவை. ஆண்டாள் தான் மட்டும் தனியே இறைவனை நாடாமல் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுவதும் கிட்ட வேண்டும் என்று எண்ணி எழுதியதுதான் இந்தத் திருப்பாவை. இது, முதல் பாடலிலேயே ஆண்டாள் ‘நீராடப் போதுமீர் போதுமின்’ என்று விருப்பமுள்ளவர்களை வரச் சொல்லிக் கூப்பிடுவது வெறும் சாதாரண நீராட்டத்திற்கு மட்டுமன்றி பக்திக் கடலில் அனைவரையும் மூழ்க வைக்கவும் தான் என்பதிலிருந்தே புரிபடும்.

ஆண்டால், ஏன் பாவை நோன்பிருந்தாள்? அதனால் அவளுக்குக் கிட்டியது என்ன? அதை எப்படி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று எழுதியதே ‘திருப்பாவை’. இதில், ஆண்டாள் கூறியதைச் சற்றுப் பார்ப்போம்....

கடலில் மூழ்கினால் முத்து கிடைக்கும். நாராயணனின் பக்தியில் என்ன கிடைக்கும்? இதற்கான பதிலை ஆண்டாளே தருகிறாள்; அது தான் ‘பறை’

அதை யார் தருவார்? ’நாராயணனே நமக்கே பறைத் தருவான்’. (முதல் பாடல்)

எப்பொழுது?         ’நம்மால் போற்றப் பறைத் தரும் புண்ணியன்’ (10-ஆவது பாடல்)

இதை சொன்னது யார்?   ’உமக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்’ [உங்களுக்குப் பறை தருவேன் என்று கண்ணன் நேற்றே (முன்னரே) வாக்களித்துள்ளான்]. (16-ஆம் பாடல்)

எப்படித் தருவான்? ’என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்’. (24-ஆம் பாடல்)

எவ்வாறு கேட்க வேண்டும்?      ’உன் தன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி’. (25-ஆம் பாடல்)

முதல் 25 பாடல்கள் வரை ‘பறை’யையும் அதை நாரணனிடமிருந்துப் பெறுவதையுமே எழுது வந்துள்ளாள். ‘பறை’ என்றால் அறிவித்தல். எதை அறிவிப்பார்கள்? அங்கீகாரம் பெற்றதை அறிவிப்பார்கள். இங்கு நாராயணிடம் பக்தர்களுக்கு வேண்டியது அவன் அங்கீகாரம் மட்டுமே என்பதையே குறிக்கிறாள் ஆண்டாள். 26 ஆவது பாடலில்  ‘சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே’ பறையின் சுகானுபவத்தையும் 27-ஆம் பாடலில் அப்பறைக் கிட்டியதின் கொண்டாட்டத்தையும் காட்டுகிறாள்.

ஆனால் 29-ஆம் பாடலில் ‘பறை’யையும் தாண்டி ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம் உமக்கே யாமாட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று அடுத்த நிலையையும் காட்டுகிறாள்.

30-ஆவது பாடல் திருப்பாவையில் பலச்ருதி!

பொதுவாக கிருத்துவரகள் 25-ஆம் தேதி கிருஸ்மஸ் கொண்டாட முன்னேற்பாடாக 11-ஆம் தேதியிலிருந்து கிருஸ்மஸ் மரம் அலங்கரித்து வைப்பர். அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் முன்னேற்பாடுகள் தான் இந்த மார்கழிக் கொண்டாடங்களாக இருந்திருக்கலாம்.

19 கருத்துகள்:

  1. மார்கழி என்றதும் நினைவுக்கு வருவது விதம் விதமாக போடப்படும் கோலமும் திருப்பவையும்தான்.
    சிறு வயதில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று தொடங்கி அனைத்து பாசுரங்களையும் மனப்பாடம் செய்வது வழக்கம், திருப்பாவையின் ஓசை நயம எனக்குப் பிடித்த ஒன்று.
    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முரளி மார்கழி என்றாலே கோலங்கள் தான் நினைவுக்கு வரும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் கோலங்கள் sticker-களாகவோ அல்லது பெயிண்ட் செய்யப் பட்டவையாகவோ மாறிவிட்டனவே.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

      நீக்கு
  2. மார்கழி முதல்நாள் அதுவும் நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மார்கழி வழிபாடு சிறப்புப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. மார்கழி வந்தாச்சா! தில்லியில இன்னும் குளிரக் காணோமே!

    மார்கழி திருவிழா விளக்கம் - அருமை. வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பத்து! குளிர் ஆரம்பிக்கவில்லை. இத்தனைக்கும் சிம்லாவில் பனிப்பொழிவு ஆரம்பித்து விட்டது. காரணம் காற்று இல்லாததால். இப்பொழுது காற்று அடிக்க ஆரம்பித்து இருப்பதால் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் என்றுத் தோன்றுகிறது.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!

      நீக்கு
  5. மார்கழி குறித்து நல்ல பதிவு சார்.... அறிவியல் சார்ந்த உண்மைகளும் மார்கழியின் பின்பிலத்தில் இருப்பது நம் கலாச்சார பெருமை தான்

    பதிலளிநீக்கு
  6. முதற்பத்தியில் 'அவர்கள்' என்றெழுதியிருக்கிறீர்கள்! அப்படியென்றால், திருப்பாவை இன்று பொருந்தாதா?

    பதிலளிநீக்கு
  7. ஆண்டாளை புரிய வைக்க முயன்றுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    'என்றென்றும் உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான்'
    'உன்னை அருத்தித்து வந்தோம்'
    என்று இருக்க வேண்டும்.

    ஆழ்வார்கள் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால் அவற்றை ஈரச் சொற்கள் என்பார்கள். அவற்றை நாம் கையாளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிழை ஏற்படக் கூடாது.

    29 ஆம் பாடல் என்று இருக்க வேண்டும். 29 விடுபட்டுள்ளது.

    தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    எனது மார்கழிப் பதிவு:http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/12/blog-post_16.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைத் திருத்தங்களைச் செய்து விட்டேன். தவறுகளைச் சுட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  8. உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் ஸ்ரீனி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நம் பாவைக்கு சாற்றி நீராடினால் என்ற வரியில் குறிப்பிடப்படும் பாவை என்பவர் யார்? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. நம் பாவைக்கு சாற்றி நீராடினால் என்ற வரியில் குறிப்பிடப்படும் பாவை என்பவர் யார்? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவை என்பது இங்கு பாவை நோன்பைக் குறிக்கும். பாவை நோன்பிருக்க நாம் அவன் பேரை சாற்றி (ஓதி) நீராடுவோம் என்பது இதன் பொருள்.

      நீக்கு