திங்கள், செப்டம்பர் 26, 2011

அப்பா நீதான் திருடன்!!


அப்பா நீதான் திருடன்!!என்று என் மகன் கூப்பிட்டவுடன் தொலைகாட்சி பார்த்துக் கொண்டடிருந்த நான் திடுக்கிட்டேன். கையில் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு அவன் நிற்ப்பதைப் பார்த்த பின் தான் அவன் தன்னை காவல் துறை அதிகாரியாகவும் (Inspector!!!)  என்னைத் திருடனாகவும் விளையாட அழைத்தது புரிந்தது. நான் ஒளிந்து கொள்ள அவன் கண்டுபிடிப்பான்.

சில நேரம் நான்; வேறு சில நேரம் என் மனைவி அல்லது மகள்.

இதே போல் என் மகளும் சில சமயம் ஆசிரியை; வேறு பொழுது மருத்துவர் அல்லது வேறு தொழில் செய்பவர் அல்லது இருக்கவே இருக்கிறது அப்பா அம்மா விளையாட்டு. குழந்தைகளுக்கு தான் இப்படி வேறு வேறு வேஷம் போட்டு எத்தனை விளையாட்டுகள்.

அதிலும் குழந்தைகள் தங்களுக்குள் ஒளிந்து விளையாடும் பொழுது ”தயாரா” என ஒரு குழந்தை கேட்க (ஒளிந்திருக்கும்) குழந்தை ”தயார்” என அப்பாவியாக குரல் கொடுக்கும். குரல் வந்த திசையில் தேட வேண்டும் என்பது கூட அந்தக் குழந்தைக்குத் தெரியாத அப்பாவித் தனம்.

பெரியவர்களான நமக்கு இது சில நேரங்களில் போரடிக்கும். இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் பொழுதை மகிழ்ச்சியாக செலவிட மட்டுமே உதவும் என்பது பெரும்பாலானவர்களின் நினைப்பு,

ஆனால், வல்லுநர்கள் இவை குழந்தையை மகிழ்விப்பதுடன் அவர்களின் கற்பனைத் திறன், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களின் உணர்வு மற்றும் அறிவு பூர்வ அணுகு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தவும் உதவும் என்கிறார்கள். மேலும், இவை அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களைக் கூர்ந்து கவணிக்கவும் உதவுவதாகவும் கூறுகிறார்கள்.  

பொதுவாக குழந்தைகளின் கற்பனைத் திறன் அவர்களின் இரண்டு வயது முதல் ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து கவணித்து அவற்றை திரும்ப (imitate) செய்ய விழைகிறார்கள். அவ்வாறு செய்வது அவர்களுக்கு மகிழ்சி அளிக்கிறது.

எனவே, பெற்றோராகிய நாம் அவர்கள் இது போன்ற விளையாட்டுகள் விளையாடும் பொழுது அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். சில நேரம் நாமும் கலந்து கொள்ளலாம். ஆனால், அந்த விளையாட்டில் அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அவற்றை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது. அவர்களாகவே அவர்களின் வழியில் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டும். முக்கியமாக நாம் அவர்களை சுமந்து செல்ல விழையக்கூடாது.

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கலவை – 4


கலவை – 4

கூடங்குளத்தில் அணு ஆலையின் பணிகளை நிறுத்திவைக்குமாறு சட்டசபை தீர்மாணம் இயற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் (தற்காலிகமாக) கைவிடப் பட்டுள்ளது. இதில் மாநில அரசு முதலில் தடுமாறினாலும் பின் சுதாரித்துக் கொண்டது. இருந்தாலும் இதை முழு வெற்றி என்று கூறமுடியாது. இதில் மத்திய அரசு என்ன நிலை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்த இடைவெளியை மத்திய அரசுடன் போராட தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரே-வை என்ன தான் குறை கூறினாலும், அவர் மக்களை ஒன்று படுத்தி அகிம்சை முறையில் போராட ஒரு ஊக்கம் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த ஆயுதத்தை நம் தலைவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். அதில் தான் பிரச்சனை.

சென்ற வாரம், மத்திய திட்டக் குழு வறுமைக் கோட்டை வரையறுக்க ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் இருந்தால் அவர் ஏழை என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று கூறியுள்ளது. அது சரி திட்ட குழு தலைவரின் (வேறு யார் நம் பிரதமர் தான்) ஒரு நாள் சம்பளம் அதைவிட வெறும் 105 மடங்கு (3333 ரூபாய்) தான்!!! அது சரி அவர் என்ன வேளையா செய்கிறார். ஒரு stop-gap  ஏற்பாடுதானே.

மத்திய நிதி அமைச்சர் 2ஜி ஊழலில் சிதம்பரத்தையும் குறை கூறியுள்ளார். சு.சாமி நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தேர்தலில் அவர் வெற்றி(!!!!) பெற திமுக பெரிய(!!!) பணியாற்றி உள்ளது. அவர் செய்நன்றி மறக்காதவரோ?

புதிதாக ஆரம்பித்துள்ள “புதிய தலைமுறைசெய்தி சேனல் நன்றாக உள்ளது. ஒரு பக்க சார்பு செய்திகளையே கேட்டுக் கேட்டு காது செவிடான நிலையில் தற்போது சற்று பரவாயில்லை. இப்படியே நீடிக்குமா என பார்ப்போம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இன்று இறுதிப் போட்டி. பொதுவாக சாய் சரண் முதலிடம் பெறுவார் என்று தான் நினைக்கிறேன். சத்யா-வும் நன்றாக பாடுகிறார்; குறிப்பாக க்லாசிகலில்; மற்றவற்றில் சற்று பரவாயில்லை. சாய் அனைத்திலும் நன்றாகப் பாடுகிறார்.

கிரிகெட்டில் இலங்கையும் (அவர்கள் மண்ணிலேயே) தொடரை இழந்துள்ளது. சரியான ஸ்பின் (ஹெரத்தை தவிர) இல்லாததுதான் முக்கிய காரணம். மெண்டிஸ்-க்கு என்ன ஆயிற்று. கடைசி போட்டியை இலங்கை வெல்லும் என நினைத்தேன். நான்காம் நாளில் (குறிப்பாகத் துவக்கத்தில் மெதுவாக ஆடி) சொதப்பினார்கள்.

நேற்று இந்திய முன்னாள் அணித்தலைவர் மன்சூர் அலிகான் பட்டோடி காலமானார். அதிரடி தலைவர். சாதாரணமாக இருந்த இலங்கை அணி ரனதுங்க தலைமையில் எப்படி உலக தர அணியாக மாறியதோ அதுபோல (டெஸ்டில்) இந்திய அணி மாற்றத்திற்கு அவர் தான் முதல் காரணம். நான்கு சுழல் பந்து வீர்ர் அணியை அறிமுகப் படுத்தியவர். அவர் குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

அணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை


சென்ற வார முக்கிய் நிகழ்வு கூடன்குளம் அணுமின் உலையை எதிரித்து 127 பேர் கடந்த 10 நாட்களாக நடத்திவரும் உண்ணாவிரதம் தான். நம் நாட்டைப் போன்ற அலட்சிய மனநிலை கொண்ட நாட்டிற்கு அணுமின் உலை போன்றவை பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போன்றது தான்.

அணு உலைகளைப் பொறுத்தவரை பெரிய விபத்து நடந்தால் தான் ஆபத்து என்பதில்லை. ஏற்கனவே, கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் இருமுறை (1987, 2002) சிறிய விபத்துகள் நடந்துள்ளன. அதிலும் 1987-ல் நடந்த விபத்தின் காரணமாக இரண்டு வருடம் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டது. அதில் நடந்த பாதிப்பும் அதன் தாக்கமும் எவ்வளவு என்று இன்று வரை சரியான தகவல்கள் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 125 சிறிய அணு விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இவற்றில் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் அவர்களின் நிலை என்ன என்பது கூட தகவலில்லை.  

தில்லி குண்டு வெடிப்பில் உளவுத்துறை தகவலை மாநில அரசுக்கு கொடுத்தும் அவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் கூறியுள்ளது; இதுவே அரசின் பொறுப்பற்றத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அணு உலைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இது போன்ற ஒரு பொறுப்புத் துறப்பே நடக்கும். போபால் விஷ வாயு விபத்தில் நடந்த்து போல் அதன் தலைமை பொறுப்பில் உள்ளவர் தப்பித்து வெளியேறி விடுவார். பாதிக்கப் படுபவர்கள் அதற்கு ஏற்றார் போல் ஒரு அணு ஒப்பந்தமும் சம்மந்தப் பட்ட நாட்டுடன் அரசு ஏற்படுத்திக்கொள்ளும். தலைமுறை தலைமுறையாக துயரப்பட வேண்டியதுதான்.

இந்த போராட்டத்தைப் பொறுத்தவரை நேற்று பிரதமருக்கு ஜெ, அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டு, ஒரு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் இந்த வாரம் ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்வதால் அடுத்த வாரம் குழுவை சந்திப்பதாகவும் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை அனுப்புவதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இது பற்றி நேற்று புதிய தலைமுறை நிருபர் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர ஐயரை காங்கிரஸ் கட்சியின் நிலை பற்றி அறிய அவரை பேட்டி கண்டனர். ஆனால், அவரோ இது பற்றி கட்சியின் நிலையைத் தான் கூற இயலாது என்றும் தான் தன்னுடைய கருத்தை மட்டுமே கூறுவதாகவும் கூறினார். அதில், மக்கள் கூடன்குள அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றி அதிகாரிகளின் விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை, மக்களின் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அவரின் கருத்தைக் கூறுமாறு வினவிய போது தன் கருத்தை அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அரசு அவரின் கருத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என கேட்ட பொழுது அது அரசுக்குத் தான் தெரியும் என்றும் தன் கடமை அரசுக்கு கருத்து தெரிவித்ததுடன் முடிந்து விட்டதாகவும் கூறினார். அதை என்னால் ஏற்க முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட (என்ன தான் மாநிலங்கள் அவை உறுப்பினர்ரக இருந்தாலும்) மக்களுக்குத் தன் நிலையை விளக்க்க் கூட தயாராக இல்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்பொழுதுமே தலைமைக்கு அடிமை தானா. இத்தனைக்கும் அவருக்கு அரசின் நிலைபாடும் என்ன என்று தெரியாது என்றால் அவர் என்ன அரசியல் செய்கிறார் என்று புரியவில்லை.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு இதில் அன்னா ஹசாரே விடம் நடந்தது போல் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். முதலில் போராட்டததை எதிர்ப்பது/ஒடுக்க முடிந்தால் ஒடுக்குவது. போராட்டம் வலுத்தால் பேச்சு வார்த்தை நடத்துவது. அதிலும் தீர்வில்லாவிட்டால் பணிவது என்பது தான். இதில் மணிசங்கர் இப்பொழுது கபில் சிபல், திக் விஜய் சிங் போல நடக்கிறார். அது சரியில்லாவிட்டால், நாராயணசாமி பிரணாப் முகர்ஜி போல பேசுவார். பிறகு, போராட்டம் வலுத்தால் அதிக பாதுகாப்பு அமைப்புகள் நிறுவவதாகக் காட்டுவார்கள். எதுவுமே சரிபடாவிட்டால் தான் பணிவார்கள்.

ஆக வலுவான போராட்டமே இதற்குத் தீர்வு.

பின் குறிப்பு: மின்சாரத்திற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்த தீவிரமான ஆராய்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியத் தேவை. ஆனால், அரசு இந்த முயற்சியில் முனைப்பாக உள்ளதா என்பது கேள்விக்குறி. மரபு சாரா ஆற்றலை தயாரிப்பதில்/பயன் படுத்துவதில் தமிழகம் இன்று மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை ஓரளவு முன்னனியில் தான் (குறிப்பாக காற்றாலை மின் உற்பத்தியில்) இருக்கிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காலை எழுந்தவுடன் கடும்போர்


“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
 கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

பாட்டுக்கொரு புலவன் பாரதி குழந்தைகளுக்குக் கூறியது என்னவோ இதுதான்.

ஆனால் இன்று குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் படிப்பதற்கே நேரமில்லை. இதில் பாடுவது எங்கே?

ஆனால் அவர்களுக்கு தினமும் தாய் தந்தையிடமிருந்து “பாட்டு(திட்டுகள் தான்!!) கிடைத்துவிடுகிறது.

காலை எழுந்தவுடன் தான் எவ்வளவு வேலை. 

காலைக் கடன் முடித்து, பால் குடித்து, குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்குச் செல்ல புத்தகங்களை (தேடி) எடுத்துவைத்து, சீருடை அணிந்து பள்ளி கிளம்புவதற்குள் பள்ளி வண்டி வந்து விடுகிறது.

தமிழகத்திலாவது பரவாயில்லை. 9 மணிக்கு தான் பள்ளி ஆரம்பிக்கும். தில்லி போன்ற நகரங்களில் இன்னும் மோசம். 7 மணிக்கே பள்ளி ஆரம்பித்து விடுகிறது. “மாலை முழுதும் விளையாட்டுஎன்பதற்கு வசதியாகத் தான் உள்ளது. இருந்தாலும் காலையில் தினமும் கச்சேரிதான்.

எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை. கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் நிலமை போர்களம் தான்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் காலையில் மிகவும் மெதுவாக, நேர விரயத்தைப் பற்றி கவலையின்றி அல்லது மற்ற விஷயங்களில் ஈடுபட்டு பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்பது தான்.

இது எந்த அளவு உண்மை. அவர்கள் உண்மையாகவே பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே தான் தாமதிக்கிறார்களா?

காரணம் இது அல்ல.

குழந்தைகளின் மூளை பள்ளிப் பருவத்தில் குறிப்பாக ஆரம்ப நிலையில் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். அவர்களால் பெரியவர்கள் அளவுக்கு வேகமாக செயலாற்ற இயலாது. மேலும், அவர்களால் சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும். வளர வளர 2-3 வேலைகளை ஒருசேர செய்யும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். தவிர, குழந்தைகள் எப்பொழுதும் புதிது புதிதாக ஏதாவது கற்கவிரும்புவர். அதனால் ஒரேமாதிரி திட்டமிட்ட (routine) வேலைகள் – தினமும் காலை பள்ளி கிளம்பும்போது ஒரே மாதிரி வேலை தானே – அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. பள்ளியிலும் ஒரே மாதிரி நடத்தப்படும் பாடங்கள் அவர்களுக்கு வேப்பங்காய் தான். மற்றபடி, பெரும்பாலும் அவர்கள் பள்ளி செல்வதை வெறுப்பதில்லை.

தவிர மற்றொரு காரணமும் உள்ளது. நாம் நம் இளம் வயதில் இப்பொழுது உள்ளது போல் இரவு வெகு நேரம் விழித்திருந்ததில்லை. பெரும்பாலும், 9-10 மணிக்கு உறங்கிவிடுவோம். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு உறங்க 11 மணி ஆகிவிடுகிறது. [குழந்தைகளை 9-10க்கு உறங்க வைத்தாலும் நாம் 11 மணி வரை விழித்திருப்பதால் அவர்களின் உறக்கமும் பாதிக்கப்படத்தான் செய்கிறது]. கூட்டுக் குடும்பங்கள்  இர்ந்தவரை ஒரளவு வீட்டுவேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதனால், காலையில் குழந்தைகளை தயார் செய்வது எளிதாக இருந்த்து;  மேலும், ஒரு குழந்தையைப் பார்த்து மற்ற குழந்தையும் தயாராகிவிடும். ஆனால், Nuclear குடும்பத்தினால் அது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.

இதெல்லாம் அறிவுக்கு தெரிந்தாலும் காலையில் பள்ளி வாகனம் ஒலியெழுப்பும் பொழுது சண்டை ஆரம்பம் ஆவதை தடுக்க முடிவதில்லை.

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கலவை (3)


கலவை (3)

சென்ற வாரம் உறவினர் ஒருவர் காலமானதைத் தொடர்ந்து அவசரமாக சென்னை/திருச்சி செல்ல நேர்ந்தது.

திருச்சியில் காவிரியில் வெள்ளம் நிரம்பியுள்ளது. ஆனால், நீண்ட நாட்கள் வற்றியிருந்ததாலும், வேறு மாசு கலப்பினாலும் நீர் முன் போல சுத்தமாக இல்லை. ஒருவேளை நீர் வரத்து தற்போது தான் ஆரம்பித்து இருப்பதால் கூட இருக்கலாம்.

பிள்ளையார் சதுர்த்தி விழாவை “இந்து எழுச்சி(?) விழாவாக இந்து அமைப்புகள் கொண்டாடுவதால் தேவையில்லாத ஒரு பதற்றம். குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில். சாதாரண பிள்ளையார் “விஸர்ஜனவிழாவாக இருந்தால் இது இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அமைதியான ஒரு விழா நிறுவனப் படுத்தப் படுவதால் வரும் பிரச்சனை.

நீதிபதி சௌமித்ரா சென் நான் நினைத்தது போலவே தானாவே பதவியை துறந்துள்ளார். இதனால் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்க்கும் மூளக்கூடிய ஒரு பனிப்போர் தவிர்க்கப் பட்டுள்ளது.

இதற்குள் தில்லியில் உயர்நீதிமன்றம் அருகில் குண்டு வெடிப்பு. இரண்டு மாதம் முன்பு அதே இடத்தில் ஒரு முன்னோட்டமும் பார்த்துள்ளனர். ஆனால், தில்லியில் எச்சரிக்கையாக இருப்பது என்பது மிகவும் கடினம். காரணம், “சல்தா ஹை (நடப்பது நடக்கட்டும்)என்ற பொது குணம். இது பொதுமக்களிடம் இருந்து காவலர்களுக்கும் மாறியுள்ளது. [அவர்களும் பொதுமக்களில் இருந்து வந்தவர்கள் தானே!!!]. இது மாறும் வரை இதை தடுப்பது கடினம்.

சென்னை முன் போல இல்லை. எல்லா இடங்களிலும் நெரிசல். ஒரே ஒரு நாள் தான் இருக்க நேர்ந்த்து (நேரமில்லாததால்). பொதுவாக முன்பு சுவரொட்டிகளில் கலைஞரின் படங்கள் அதிகமாக இருந்தது போல் இப்போது ஜெ. யின் படங்கள் இல்லை. சற்று அடக்கி வாசிக்கிறாரோ?

சென்ற வாரம் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீண்டும் தாக்கப் பட்டுள்ளது. இம்முறை பெட்ரோல் குண்டு. இது எந்த மாதிரி எதிர்ப்பு என்றே புரியவில்லை. இதை பொதுவாகவே இதை திராவிட கட்சிகள் தான் அறிமுகப் படுத்தின. என் நினைவுகள் 1989-ம் ஆண்டுக்கு செல்கிறது. அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நேரம். இரவு என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நண்பனின் வீட்டில் படிப்போம். அந்த நண்பனின் தந்தை தென் சென்னை வட்ட செயலாளர் (வீடு எம்.ஜி.ஆர் நகரில்).   அப்பொழுது, அதிமுக படு தோல்வி அடைந்த்து. முடிவுகள் வந்த அன்று இரவு அவனுடைய தாய் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கினார். எங்களையும் வேறு நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் படி கூறினார். ஆனால், அடுத்த தினம் தேர்வுக்கு ஒரு பாடத்தில் அந்த நண்பனின் சந்தேகங்களை தீர்க்கவேண்டி இருந்ததால் அந்த நண்பனும் நானும் மட்டும் அவனுடைய வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். மற்ற நண்பர்கள் வேறு பாடம் படிக்க அடுத்த தெருவில் கூடியிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று ஒரே கல் மழை. அவசர அவசரமாக அவன் வீட்டிலிருந்த விளக்குகளை அணைத்து விட்டு பின் வழியாக வெளியே வந்தோம். எனக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி. ஆனால் அவனோ இது சாதாரணமாக நடப்பதுதான் என்றும் இதே அதிமுக வென்றிருந்தால் திமுகவினர் வீட்டிலும் இப்படிதான் நடக்கும் என்று சாதாரணமாகக் கூறினான். காரணம், பொதுவாக சென்னையில் அதிமுகவினர் சற்று அடங்கிதான் இருக்க வேண்டும் (ஏனென்றால் சென்னை அப்பொழுது திமுக கோட்டை) ஆனால் ஆட்சியோ அதிமுக வசம் எனவே காழ்ப்புணர்வு சற்று அதிகம் இருந்திருக்கும். ஆனால் தற்போது சேகரைப் பொறுத்தவரை அவர் எதிர்கட்சி சார்புடையவர். ஆனால வம்புக்காரர். தேவையிருக்கிறதோ இல்லையோ அனைத்திலும் மூக்கை நுழைப்பவர் அதுதான் காரணமாக இருக்கும். எப்படியிருந்தாலும் அவரை இந்த முறையில் எதிர்ப்பது தவறு தான்.  

கிரிகெட்டில் ஒரு போட்டியைக் கூட பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. (நல்ல நேரம்!!) ஒரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. ஆனால், எண்ணிக்கைகளைப் பார்த்தால் ஓரளவு நன்றாக விளையாடியுள்ளது போல் தான் தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் (ஜடேஜா, ரஹானே, ரெய்னா). தோனியும் ஃபார்மில் வந்த்து போல் தான் தெரிகிறது. ஜடேஜா தன் இடத்தை எங்கே விட்டாரோ (இங்கிலாந்தில் நட்ந்த 20-20 உலகக் கோப்பை சொதப்ப ஆரம்பித்து) அங்கேயே திரும்ப பிடித்துள்ளார்

இன்னும் ஒரு போட்டி மீதியிருக்கிறது அதுவாவது கிட்டுமா என்று பார்ப்போம். அங்கே இலங்கையும் சரியாக விளையாடவில்லை. இதில் ஆசிய ஆடுகளங்களை குறைகூறுவதில் அர்த்தமில்லை. ஆஸ்த்ரேலியா இங்கிலாந்து இந்தியா/இலங்கையில் சொதப்புவார்கள். ஓரளவு அவை மட்டையாட்ட்த்திற்க்கு உதவுவதால் அவர்கள் இது போல வெள்ளையடிக்கப்படுவதில்லை. இல்லையென்றால் அவர்களின் நிலையும் இதுதான். அதுவும் ஆஸ்த்ரேலியாவின் தற்பொழுதைய அணி இலங்கையில் அவர்களின் spin-ஐ ஆடுவது கடினம்தான். ஆஸ்த்ரேலியாவில் நடப்பதால் அவர்கள் கை ஓங்கியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சற்று வலுவாக முதலிடத்தில் (வரிசையில் மட்டுமில்லாமல் உண்மையாகவே) உள்ளது.

வியாழன், செப்டம்பர் 01, 2011

கணேச பஞ்சரத்னம்


 
இன்று  விநாயக சதுர்த்தி

அதற்காக கணேச பஞ்சரத்னம்ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது.

முதா கராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலாதரா வதம்சகம் விலாசிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
நதா சுபாஸு நாசகம் நமாமி தம் விநாயகம்.             1.

நதே தராதி பீகரம் நவோதி தார்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜனம் நதாதி காப துத்தரம்
ஸுரேஷ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேச்வரம்
மஹேஸ்வரம் சமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.            2.

ஸமஸ்த லோக ஸம்கரம் நிரஸ்த தைத்ய குஞரம்
தரேதரோதரம் வரம் வரே பவக்த்ர மஷ்கரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.      3.

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் சுராரி கர்வ சர்வனம்
ப்ரபஞ்ச நாச பீஷனம் தனஞ்சயாதி பூஷனம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்.            4.

நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ரிந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வசந்தமேவ யோகிநாம்
தமேக தந்த மேவதம் விசிந்தயாமி சந்த்தம்.              5.

[பலச்ருதி]
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேந யோன்வகம்
ப்ரஜல்பாதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்
அரோகதாம் அதோஷதாம் ஸுசகிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுர்ஷ்ட பூதி மபுபைதிர் ஸோசிராத்.