புதன், மார்ச் 07, 2012

வண்ணத் திருவிழா



ஹோலிப் பண்டிகை என்று வட இந்தியாவில் கொண்டாடப் படுவது வண்ணத் திருவிழா. இது வட இந்தியர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படுகிறது. சில இடங்களில், ஹோலிக்கான ஏற்பாடுகள் வசந்த பஞ்சமியன்றேத் துவங்கி ஒரு மண்டலம் (40 நாட்கள்) நடைபெற்று முடிவில் ஹோலியாகக் கொண்டாடப் படுகிறது. குறிப்பாக வங்காளத்தில் வசந்தோஸ்தவமாகவே கொண்டாடப் படுகிறது.

வட இந்தியாவில் ஹோலிக்கு முன் தினம் பொது இடத்தில் கட்டைகளை எரியூட்டி அதைச் சுற்றி அனைவரும் இசைத்துப் பாடி மகிழ்வர். இவ்வாறு எரியூட்டுவதைப் பற்றியப் புராணக்கதைகளில் இரண்டு மிகவும் பிரபலமானவை. 
முதலாகவதாகக் கூறப்படுவது ஹோலிகா தகனம். ஹிரண்ய கஷ்யப் (கஷ்யப் என்பது அவனது குலப் பெயர்; அவன் கஷ்யப முனிவருக்கும் தக்ஷனின் மகள் திதிக்கும் பிறந்தவன்) தன் மகன் ப்ரஹ்லாதனைக் கொல்ல ஆணையிட அவனுடையப் படை அதை முடிக்க முடியாமல் தவித்ததால் அவனுடையத் தங்கை ஹோலிகா ப்ரஹ்லாதனை தன்னுடன் வைத்து எரியூட்டும்படியும், தான் பெற்ற சிறப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டுத் தான் எரியாமல் ப்ரஹ்லாதனைப் பிடித்துக் கொண்டு அவனை அழித்துவிடலாம் என்று யோசனைக் கூற, ஹிரண்யனும் அவ்வாறேச் சிதை மூட்டினான். ஆனால், விஷ்ணுவின் அருளால் போர்வை நழுவி, ப்ரஹ்லாதன் மேல் விழுந்து அவனை மூடிக் கொள்ள, ஹோலிகா எரிந்து சாம்பலானாள். அதுதான் ஹோலிகா தகனம். 
இரண்டாவதாகக் கூறப்படுவது காம தகனம். சதிதேவியின் இறப்பிற்குப் பின் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடக்க, ஆழ்ந்த தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி காமதேவன் மலர்கணைத் தொடுக்க, அவர் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறக்க, அதன்  வெப்பம் தாங்காமல் காமதேவன் எரிந்தது தான் காம தகனம். 

ஆனால் மூன்றாவதாக அவ்வளவாகப் பிரபலமாகாத  ஒரு கதை பாகவதத்தில் இருக்கிறது அதுதான் துந்தியின் கதை.....

உலகின் முதல் மனிதன் ஸ்வயம்புவ மனு; அவன் மனைவி சதரூபா.

அவர்களின் முதல் மகன் உத்தனபாதன், இரண்டாவது மகன் ப்ரியவ்ரதன்

உத்தனபாதனுக்கு இரண்டு மகன்கள் துருவன் (சுநிதியின் மகன்); உத்தமன் (சுருசியின் மகன்).

துருவனின் வம்சத்தில் பின்னர் தோன்றியவன் ப்ரிது. அவன் நல்ல அரசன் தான். ஆனாலும் அவனுடைய ஆட்சியில் பல பகுதிகளில் திடீரென்று உணவுப் பொருட்கள் காணாமல் போய் மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்தனர். ப்ரிது, அதற்கு என்ன செய்வது என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது,  ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாட சென்றிருந்த பொழுது, மிகவும் பசியுடன் இருந்தான். திடீரென்று, அவன் முன் ஒரு கிழப்பசுத் தோன்றியது. அதை வேட்டையாட அவன் துரத்திச் சென்றான்; அது அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்றது.  

மிகவும் கலைத்துப் போன அவன் ஒரு இடத்தில் தன் வில்லைக் கூடத் தூக்க முடியாமல் நிற்க, அந்த பசு  ஒரு சிறு பெண்ணாக மாறியது.
உடனே மன்னன் அச்சிறுமியை நோக்கி,  “மகளே! நீ யார்” என்று கேட்டான். 

அச்சிறுமி, “நான் ஒரு தேவபசு! கேட்டவர்களுக்கு அனைத்தையும் தரும் காமதேனுவைப் போன்றவள். ஆனால்,  இப்பொழுது எதுவும் அளிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டேன். அதனால் என்னை ஆதரிப்பார் யாருமில்லாமல் நான் அநாதை ஆகிவிட்டேன்” என்று கூறினாள். 

மேலும் தொடர்ந்து, “மன்னா! எனக்கு தற்போது உன் மக்களுக்கு உணவு கிடைகாததன் காரணம் தெரியும். என்னிடம் எல்லா உணவுப் பொருட்களின் விதைகளும் பயிர்களும் இருந்தன. அவை, மேலேயே இருந்ததால் ‘டுண்டி’ என்ற பெரிய அரக்கி அவற்றைத் தானே உண்டு மக்களுக்குத் தராமல் தின்று விடுகிறாள். அதனால், நான் அவற்றை என் உள்ளுக்குள் யாருக்கும் தெரியாதபடி புதைத்துக் கொண்டு விட்டேன்.  என்னுள் புதைந்துள்ள அப்பொருட்களை எடுக்க மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே, அவன் தேவைக்கு ஏற்ப வெளியிடுவேன்” என்று கூறினாள். 

உடனே மன்னன் டுண்டி-யை அழிப்பது எப்படி என்று வினவினான்.

அதற்குப் பசு, “அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. அதைக் கொல்ல முதலில் அதை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு, என்னைத் தோண்டி என் உள்ளில் இருக்கும் உணவை அணைவருக்கும் அளி! ‘டுண்டி’ என்றால் மகிழ்ச்சியொலி; மக்களின் மகிழ்ச்சி சத்தத்தில் தான் அந்த  அரக்கியும் அழிவாள். அதனால் தான் அவள் பெயர் ‘டுண்டி’  ” என்று கூறியது.

அனைத்தையும் கேட்ட மன்னன், “மகளே, உன்னை ஆதரிப்பார் யாருமில்லை என்ற கவலை வேண்டாம். இனி நீ என் மகள்” என்று அச்சிறுமியை ஆரத் தழுவினான். உடனே அப்பெண்ணின் உடல் பச்சை நிறமாக மாற அவள் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.


மன்னனுக்கு வந்தது பூமித் தாய் என்று புரிந்தது. பூமியில்  இதுவரைத் தானாகத் தோன்றி வரும் உணவுப் பொருட்கள் இனிமேல் கிடைக்க வேண்டுமென்றால் பூமியைச் சீர் செய்து அதைச் சமன் படுத்தி விதையிட்டு பயிர் செய்ய வேண்டுமென்று புரிந்து கொண்டான். அவ்வாறேச் செய்து பூமியில் முதல் முதலாகப் பயிர்த் தொழிலைத் துவங்கி வைத்தான். ஆம்! பூமியின் முதல் விவசாயி ‘ப்ரிது’. பூமித் தாயும் அன்று முதல் ‘ப்ரித்வி’ (ப்ரிது-வின் மகள்) என்று அழைக்கப்பட்டாள்.

பயிரை அறுவடைச் செய்து அன்றிரவு அதில் உணவுப் பொருட்களை தன் மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அணைவரும், அக்கால வழக்கப்படி பொது இடத்தில் நடுவில் எரியூட்டிப் பாடி மகிழ, டுண்டி என்ற அந்த பட்டினி அரக்கி அழிந்து போனாள். அதுவே ஹோலியன்று முதல் நாள் நடக்கும் விழா என்ற தொன்மமும் உண்டு.


ப்ரிதுவின் கதை என்பது மனிதன் வேட்டுவத் தொழிலிலிருந்து உழவுத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் கதையாகக் கொள்ளப் படுகிறது. 

அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துகள்...

6 கருத்துகள்:

  1. இதுவரை அறியாத ப்ரிதுவின் கதையை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஹோலி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள்,

    இது பாகவதத்தில் உள்ள ஒரு கதை.

    பதிலளிநீக்கு
  3. புதுக் கதையும் தெரிந்துகொண்டேன்,எம்மாங்கதை!!!!.

    பதிலளிநீக்கு
  4. 'ப்ரித்வி' பெயர்க்காரணம் போன்ற பல தெரியாத தகவல்களை அள்ளித் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வெங்கட், ஆச்சி, பத்து

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு