புதன், டிசம்பர் 23, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-4)

இதாகாவில் ஒடிஸியஸ்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-4) 

(இதன்  பகுதி-1பகுதி-2, பகுதி-3)

ஓடிஸியஸ், இவ்வாறு பல நாட்கள் தன் தாய் நாடு திரும்பி வர பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவனது மனைவியும் மகனும் பல சோதனைகளைச் சந்தித்தனர். பல வருடங்களாகத் தன் தந்தை திரும்பாததால், அவன் மகன் டெலிமாசஸ் (20 வயது), ஓடிஸியஸைத் தேடிச் சென்றான். தனியாக இருந்த அவன் மனைவி பெனலோப்-ஐ, தங்களை மணக்குமாறு (அவள் அழகாலும், அவள் மூலம் அந்த ராஜ்ஜியத்தையும் ஆள முடியும் என்பதாலும்). ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பலரும் (அவளின் சுயம்வரத்தில் வந்த 108 பேர்கள் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்படுவதுண்டு) வற்புறுத்த ஆரம்பித்தனர். பல வருடங்களானதால் ஓடிஸியஸ் இறந்துவிட்டான் என்றும், அதனால் அவள் தங்களில் யாரையாவது மணக்க வேண்டும் என்று தினமும் அவளுக்குத் தொல்லைத் தர ஆரம்பித்தனர்.

அவர்களின் தொல்லையை தவிர்க்க தான் தன் கணவனுக்கு இறுதி மரியாதைச் செலுத்தும் வண்ணம் அவனுக்குக் கோடித்துணி (மரணத்தில் போர்த்தும் துணி) நெய்வதாகவும் அந்த வேளையை முடித்த பின்னர் தான் தன் திருமணத்தைப் பற்றி முடிவெடுக்க முடியும் என்று கூறி சமாளித்தாள். அதன்படி, பகல் முழுவதும் துணியை நெய்து, இரவில் யாருக்கும் தெரியாமல் அதை பிரித்து விடுவாள்.

ஏதென்னா கடவுளின் ஆசியுடன் ஸ்பார்டா சென்றடைந்த டெலிமாசஸ், அங்கு மெனலாஸ்-ஐ சந்தித்தும் ஓடிஸியஸ் சென்ற இடம் தெரியாமால் மீண்டும் தன் நாட்டுக்கேத் திரும்பி வந்து விட்டான்.

இந்நிலையில், இப்பொழுது தன் நாடு திரும்பிய ஓடிஸியஸ் தன் நாடும் வீடும் இருக்கும் நிலை தெரியாமல் உள்ளே செல்லக் கூடாது என்று எண்ணி, ஒரு பிச்சைக்காரனாக வேடமிட்டு, தன் மாளிகைக்குச் சென்றான். அங்கு அவனுடைய விசுவாசியான பன்றி மேய்பவனான யூமயூஸ்-ஐ முதலில் சந்தித்து, அவன் மூலம் தன் மனைவிக்கு ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள் தரும் தொல்லைகளைத் தெரிந்து கொண்டான்.

பின்னர், அதே வேடத்திலேயே, தன் மனைவியையும் சந்தித்தான். அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவளிடம், தான் வெளி தேசத்திலிருந்து வருவதாகவும், ட்ராஜன் போரை நேரில் பார்த்த்தாகவும் அதில் ஒடிஸியஸ் செய்த வீர தீர பராக்ரமங்களையும் விவரித்தான். அதைக் கேட்ட பெனலோப்-இன் கண்களில் நீர் வழிந்தது. அவளைத் தேற்றி, அவளைத் திருமணம் செய்ய எண்ணுபவர்களுக்கு ஒரு போட்டி வைக்கச் சொன்னான். ஓடிஸியஸின் வில்லை நாண் கோர்த்து 12 கோடாலிகளை ஒரே அம்பால் தூளைக்க வேண்டும் என்பதே அந்த போட்டி. அவளது கட்டளைப்படி, டெலிமாசஸ்-ஐ இந்தப் போட்டியை நடத்தினான்.

போட்டியில் யாராலும் அந்த வில்லை நாணேற்ற முடியவில்லை. இறுதியில் ஓடிஸியஸே அந்த வில்லை நாணேற்றி 12 கோடாலிக் கொம்புகளையும் ஓரே அம்பால் துளைத்தான். அதன் பிறகு, ஒரு பிச்சைக்காரன் போட்டியில் வென்றதால் அங்கு பெருங்குழப்பம் ஏற்பட்டது. தன்னை யாரென்று வெளிப்படுத்திய ஓடிஸியஸ், தன் மகன் டெலிமாசஸ், யூமயூஸ் ஆகியோருடன் சேர்ந்து அவர்கள்  அனைவருடனும் சண்டையிட்டு அவர்களை அழித்தான். எதிரிகளின் விசுவாசிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கூச்சலையும் குழப்பத்தையும் கேட்டு மனங்கலங்கிய பெனலாப், அந்தப் பிச்சைக்காரன் தான் தன் கணவன் என்பதை நம்ப மறுத்தாள். அதனால், அவனை வேறொரு சோதனைக்கு உள்ளாக்கினாள். அவனை அவள் அறையில் உள்ளக் கட்டிலைத் தூக்கி சபையில் வைக்குமாறு கூறினாள். இதைக் கேட்ட ஓடிஸியஸ் அந்தக் கட்டிலை கடவுளின் அருளால் தான் தன் கைகளாளேயே செய்த்தாகவும் அந்த மரத்திற்கு (கட்டிலுக்கு) இன்னமும் உயிர்  இருப்பதால் அதை அங்கிருந்து யாராலும் பெயர்க்க முடியாது என்றும் கூறினான். இதைக் கேட்ட பெனலாப், இது தனக்கும் ஓடிஸியஸுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை என்பதால், அவன் தன் கணவன்தான் என்பதை உணர்ந்தாள். அவர்கள் மீண்டும் இணைந்தார்கள்.

ஹோமெர்-இன் ஓடிஸியஸில் கதை இத்துடன் முடிந்துவிடுகிறது. ஆனால், உத்தர ராமாயணம் போல் இதன் பிறகும் ஓடிஸியஸின் கதை இருக்கிறது. அவன் செய்த துரோகங்களும் கொலைகளும் அவனை நிம்மதி இல்லாமல் இருக்க வைத்தன. முக்கியமாக, ட்ராய் மக்களை தான் ஏமாற்றியதும் ஹெக்டரின் மகனை சுவற்றில் அடித்துக் கொன்றதும், தன் நண்பர்களை தெரிந்தே ஸ்கைலாபிடம் காவு கொடுத்ததும் தன் சொந்தங்களான ராஜ வம்சத்தினரைக் கொன்றதும் அவனை பெரிதும் வாட்டியது. தன் நணபர்கள், பங்காளிகளின் தாய்-தந்தையரின் சாபம் தன்னை ஏதாவது செய்துவிடும் என்று அஞ்சினான். தன் மகன் டெலிமாசஸ்-க்கு அரசாட்சியை அளித்து, மனைவி பெனலாப்-ஐயும் விட்டுவிட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறினான்.

இவை அவனுக்கு முன்னமே தீர்க்கதரிசி டைரேசியஸ் மூலம் தெரிந்திருந்த்து. அவர் அவனிடம் அவனை கப்பலின் துடுப்பை என்ன என்று அறியாத மக்கள் வாழும் நாட்டை அடைந்தால் தான் அவனுக்கு அமைதி கிடைக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி அவன் தன் கையில் ஒரு துடுப்பை எடுத்துக் கொண்டு நாடு நாடாக அலைந்தான்.  பல வருடங்களுக்குப் பின் அவன் கடல் என்பதே அறியாத இடத்திற்குச் சென்று அங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு அவன் துடுப்பு தானியம் தூற்றும் விசிறியாக மாறியது. [இது கடலோடியாகவும் நாடோடியாகவும் இருந்த மனிதன், ஓரிடத்தில் தங்கி விவசாயத்திற்கு மாறியதைக் குறிப்பிடுவதாகவும் இருக்கலாம்].

இப்பொழுது நாம் நம் தலைப்பிற்கு வருவொம். ஈசன் ஏசு இந்த விஷயத்திற்கும் ஓடிஸியஸுக்கும் என்ன சம்பந்தம். ஈசன் – இந்திய தொன்ம்ம் தொடர்புடையது; ஓடிஸியஸ் க்ரேக்க தொன்ம்த்தைச் செர்ந்தது. ஏசுவோ யூத தொன்மத்தைச் சேர்ந்தவர். எனவே நாம் அந்தத் தொன்மத்தையும் சற்று பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக