புதன், நவம்பர் 23, 2011

குளிர்காலடக் கூட்டத் தொடரும் காத்திருக்கும் மசோதாக்களும்



ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் நேற்றிலிருந்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. இது அடுத்த மாதம் 23-ம் தேதி வரை நீடிக்கும்.

காத்திருக்கும் 80-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் 31 நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு சட்டமாக மாற பட்டியலிடப் பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமான சில:

  1. லோக்பால் மசோதா : மத்திய அரசு ஊழியர்களுக்கும் அரசில் பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் ஆம்பட்ஸ்மன் (ombudsman) அமைப்பை நிறுவுவதுதான் இதன் நோக்கம். இது இக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப் படாவில்ட்டால் மீண்டும் போராட்டத்தைத் துவங்க இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
  2. நீதித்துறைத் தரமும் பொறுப்பும் மசோதா : இது நீதித்துறை சமீப காலமாக தரம் இழந்து வருவதை தடுக்கக் கொண்டு வரப்பட இருக்கும் மசோதா. இது உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து கணக்கு வெல்ளியிடுவதையும் உள்ளடக்கியது.
  3. Whistleblower (தகவலளிப்பவர்!!) மசோதா : புகார் மற்றும் தகவல் அளிப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அப்புகார்களை விசாரிக்க உதவும் சட்டம்
  4. அரசியல் நிர்ணய சட்ட (108வது திருத்தம்): இது ஏற்கனவே 2010-ல் மாநிலங்கள் அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது. பல முறை தாக்கல் செய்யப் பட்ட போதும் இதை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாது என்று நிச்சயமாகக் கூறலாம். இந்த திருத்த்த்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இது தான் நாடளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தர ஏதுசெய்யும் திருத்தம்.
  5. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை & வளர்ச்சி ஆணையம் : ஒய்வூதிய நிதியினைத் தகுந்த திட்டங்களில் முதலீடு செய்யவும் அதில் முதலீடு செய்பவர்களின் நிதி பாதுகாப்பை சீரமைக்கவும் ஆணையம் நிறுவுவதற்கானச் சட்டம். பாதிக்கப் பட்டு பனகல் பார்கில் போராடும் முதியவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
  6. விதைகள் மசோதா: தரமான விதைகளை இறக்குமதி, ஏற்றுமதி செய்ய வழிவகுக்க. இதைப் பொதுவாக இடது சாரி கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்கின்றன. காரணம் இது பொதுவாக MNC களுக்கு ஆதரவான சட்டம் என்பதால். PT கத்திரிக்காய் என்று கேள்வி பட்டுள்ளீர்களா?
  7. சுரங்க கனிம முன்னேற்ற மசோதா : சுரங்கத் தொழிலை சீரமைக்க. இத்துறையில் கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை. பெரும்பாலும் இம்மாநிலங்களின் அரசியலையே இவை தான் தீர்மானிக்கின்றன.

இவற்றைத் தவிர நிறுவன சட்டத் திருத்தம், நேர்முக வரி திருத்தம், சேவை வரியில் திருத்தம் என முக்கியமான மசோதாக்கள் சட்டமாக்க் காத்திருக்கின்றன. இதில் முக்கியமாக விடுபட்டது, நில கையகப்படுத்தல் மசோதா, குறிப்பாக மேற்கு வங்கத்தில் த்ரிணாமுல் காங்கிரஸ் இதற்கு எதிராக இருப்பதால் இதை அரசு கையில் எடுக்கத் தயங்குகிறது என்று நினைக்கிறேன். மேலும் உத்திர பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் மாயாவதி இதை காங்கிரஸுக்கு எதிராகப் பயன் படுத்துவார்.

இவற்றைத் தவிர 23 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட உள்ளன. அவற்றுள் முக்கியமானது,
  1. அணுசக்தி சீரமைப்பு ஆணையம் (அணு உலை பாதுகாப்பு, அதன் தொழிலாளர், மக்கள் பாதுகாப்பிற்காக அணுசக்தி பாதுகாப்பு மன்றம் நிறுவப் பட உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாகத் தான் ஏற்கனவே அவர்களின் பொறுப்பிற்கு உச்ச வரம்பு நிர்ணயித்து ஆணை பிறப்பித்தாகி விட்டதே. கண் துடைப்பிற்காக இதையாவது செய்ய வேண்டாமா?
  2. கள்ளப் பணம் தடுப்பு (திருத்தம்) மசோதா :  வெளிநாட்டிளிருந்து வரும் கள்ள பணத்தை தடுக்க முக்கிய தேவை.
  3. தேசிய உணவு பாதுகாப்பு மசோதா :  பொது விநியோக முறையை சீரமைக்க [75% சத கிராம புற மக்களுக்கும் 50% நகர் புற மக்களுக்கும் ரூ.3/-க்கு அரிசியும், ரூ.2/-க்கு கோதுமையும் ரூ.1/-க்கு தானியமும் தருவார்களாம்!!!]

ஆனால் மேற்கூறிய சட்டங்களை விவாத்திது இயற்ற அவர்களுக்கு இருக்கும் கால அவகாசம் எவ்வளவு தெரியுமா? 22 வேலை நாட்கள். ஆக மொத்தம் 54 மசோதாக்களை இதற்குள் விவாதிக்க வேண்டும்.

இவற்றைத் தவிர அரசியலும் உண்டு. ஆம் ஊழல், விலையேற்றம், கருப்புப் பணம் ஆகியவற்றோடு மாயாவதி கொளுத்திப் போட்ட உத்திர பிரதேச பிரிவினை, தெலுங்கானா பிரச்சனை என்று பல உள்குத்து வேளைகளும் உள்ளன. நேற்றைய தினம் விலைவாசி பிரச்சனைபின் அரசின் நிலையை ஓட்டெடுப்பிற்கு விட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்து விட்டன. பாஜாக வேறு சிதம்பரத்தைப் பேச விடுவதில்லை என்று தீர்மாணித்திருக்கிறது. ஆக மேற்கூறிய சட்டங்களில் சில விவாதமின்றியே (அதாவது அதிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றி யாருக்குமே தெரியாமல்) நிறைவேறும். சில எப்போதும் போல அடுத்தக் கூட்டத்தொடருக்குக்காக கிடப்பில் போடப்படும்.   

பின் குறிப்பு:   நாடாளுமன்றம் இழக்கும் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.25000/- நஷ்டம் (அரசு கஜானாவிலிருந்து அதாவது திருவாளர் மக்களின் பணம்).

திங்கள், நவம்பர் 21, 2011

கலவை – 9


மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவோம் என்று எழுதி ஒரு வாரம் கூட ஆகவில்லை, இது தான் சமயமென்று நிதி அமைச்சகம் விமானப் போக்குவரத்துத் துறையில் 24 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment) அனுமதிக்க உள்ளது. இது பல நாட்களாகவே அரசின் திட்டத்தில் இருந்தாலும் அத்துறை நிறுவனங்களின் எதிர்ப்பால் அதற்கு அனுமதிக்கவில்லை. இப்போதைய ‘கிங்பிஷர்’-இன் நிலைமையைக் கண்டு இதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு தான் தீர்வு என்ற துறை வல்லுநர்களின் கூற்றுக்காகவே காத்திருந்தது போல் மத்திய அரசு இப்போது இதற்கு அனுமதி தந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை வேண்டுமானால் சீராகுமே தவிர மக்களுக்கு அதன் பலனாக போக்குவரத்து செலவு குறையுமா என்பது புரியவில்லை. பொதுவாக, இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று முதலில் சில சலுகைகளைத் தந்து பின்னர் போட்டியிலிருக்கும் இந்திய நிறுவனங்களை மூழ்கடித்துத் துரத்திவிட்டு பின் சுரண்டத் தொடங்குவர். நம் கண் முன்னரேயே பெப்ஸி, கோக் நிறுவனங்கள் முதலில் ரூ.5/- க்கு விற்ற அதே அளவு பானத்தை இன்று ரூ.22/-க்கு விற்கிறார்கள். இடையில், இந்திய நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியாததால் தொழிலை விட்டுவிட்டன அல்லது அவற்றின் பிரபலமான brand-கள் (limca, thumpsup போன்றவை) இவற்றாலேயே வாங்கப்பட்டது தான் மிச்சம். ஆனால், இப்போதைக்கு இதன் அனுமதி வெறும் 24% என்பது தான் ஒரே ஆறுதல்.

தில்லி மெட்ரோ ரயில் சேவையின் நான்காம் கட்டத்தின் திட்ட விரிவாக்க அறிக்கைத் தயாரிக்கப் பட உள்ளது. இதன் படி, ஏழு புதிய இணைப்புகள் நடக்க இருக்கின்றன. அவை:
1.    யமுனா – லோனி எல்லை (11.97 கி.மீ)
2.    ஜனக்புரி (மே) – முகுந்த்புரி (18.74 கி.மீ)
3.    முகுந்த்புரி – தில்ஷாத் கார்டன் (17.54 கி.மீ)
4.    கீர்த்திநகர் – த்வாரகா (செ.28) (18.7 கி.மீ)
5.    பதர்பூர் – தில்லி ஏரோசிட்டி (20.79 கி.மீ)
6.    லாஜ்பத் நகர் – மதன்கீர் (7.33 கி.மீ)
7.    ஆசாத் பூர் – ராமக்ருஷ்ணா ஆஷ்ரமம் (8.3 கி.மீ)
மேற்கூறிய இணைப்புகள் நிறைவேறினால் தில்லி மெட்ரோ ரயில் லண்டன் மெட்ரோவை விட நீளமானதாக ஆகிவிடும். இது வரை காலக்கெடுவுக்குள் தன் புதுத் தளங்கள் மற்றும் இணைப்புகளை நிறைவேற்றியுள்ள DMRC இதையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என்று நம்புவோம்.

இங்கே கூடங்குளத்தில் புதிய அணு உலை திறப்பிற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ஈரானில் இதற்கு நேர் எதிர் நிலை. டெஹ்ரானில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் அணு உலையை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமன்றி ஆயுதம் தயாரிக்கவும் பயன் படுத்துகிறது என அமெரிக்காவும் பிரிட்டனும் புகார் கூறியுள்ளன. ஈரான் அரசும் இதை மறுத்துள்ளது. ஈராகிலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை (தவறாக) சதாமுக்கு எதிராகக் கூறியது நினைவுக்கு வருகிறது.

சென்ற வாரம், வினோத் காம்ப்ளி 1996 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் (இந்தியா-இலங்கை இடையே நடைபெற்றது) அணிக் கூட்டத்தில் முதலில் மட்டையாட்த் தீர்மானித்ததாகவும் ஆனால், டாஸில் வென்றதும் (அசார் தன்னிச்சையாக) முதலில் இலங்கையை விளையாட அனுமதித்த்தில் ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், அணியின் அப்போதைய பயிற்சியாளர் கெய்க்வாட் மற்றும் அணைத்து ஆட்டகாரகளும் (சித்து நீங்கலாக) மறுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இது காலந்தவறிய குற்றச்சாடு. இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போதே (ஏனெனில் அப்போது அசார் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அவர் தனிமை படுத்தப் பட்டிருந்தார். அதாவது அவர் influence-இல் இல்லை; அந்த சமயத்தில் அவர் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் நம்பப் பட்டிருக்கும்) அதைவிட்டு இப்பொழுது கூறுவதை “கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அன்றைய தேதியில் இலங்கை நல்ல chaser-களாக இருந்தார்கள்; தவிர தில்லியில் நடந்த லீக் போட்டியில் சச்சின் சதம் அடித்தும் முதலில் விளையாடிய இந்தியா தோற்றது. அதனால், பொதுவாக ரசிகர்கள் மத்தியிலேயே இந்தியா முதலில் பந்து வீச வேண்டும்; அப்படி வீசினால் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடாமல் சற்று நிதானமாக ஆடுவார்கள் (யார் ஜெயசூர்யா கலு ஜோடியா என்று எதிர்கேள்வி கேட்பது புரிகிறது) மைதானமும் fresh ஆக இருப்பதால் துவக்க ஆட்டக் காரர்களால் அடிக்க முடியாது என்று தான் பேசிக் கொண்டோம். அது ஓரளவு நல்ல முடிவாக துவக்க ஆட்டக் காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். (அரவிந்தா வேறு திட்டம் வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்?). அதே போல, இந்திய வீரர்கள் 92/2 என்ற நிலையிலிருந்து சச்சின் அவுட் ஆனவுடன்108/8 என்று மாறியதிலும் ”ஏதோ” நடந்திருக்கிறது என்கிறார். ஆனால், வல்லுநர்கள் புதிதாக இடப்பட்ட மைதானம் உடைந்தது தான் காரணம் என்று அன்றைய தினம் comment செய்தனர்; இதைப் பற்றி மைதானத்தில் அவுட் ஆகாமல் இருந்த காம்ப்ளி கூறுவது தான் சரியாக இருக்கும் என்று கொண்டாலும், இத்தனைக் காலம் கழித்து இதைக் கூறுவது சரியில்லை என்பது தான் என் கருத்து.

கடைசியாக படித்ததில் பிடித்தது,

”ராஜராஜ சோழனுக்குப் பின் ”அம்மா” அரசாண்டிருந்தால்…..
பெரிய கோவில், பெரியாஸ்பத்திரி ஆகியிருக்கும்.”
Mummy Returns!!!

வியாழன், நவம்பர் 17, 2011

உத்திர பிரதேசத்தின் எதிர்காலம்



நேற்று மாயாவதி உத்திர பிரதேசத்தை நான்கு – பஷ்சிம் ப்ரதேஷ், ஆவாத் ப்ரதேஷ், புந்தேல்கந்த், பூர்வாஞ்சல் - புதிய மாநிலங்களாக மாற்ற சட்டசபைத் தீர்மாணம் இயற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசம் சுமார் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், இன்றைய நிலையில் சுமார் 20 கோடி மக்கள் தொகையையும் (அதாவது தேசத்தின் 16% மக்கள் தொகை) கொண்ட ஒரு பெரிய மாநிலம். எனவே அது ஒரு கட்டுபாடற்ற மாநிலமாக இருப்பதாகவும், அதை நான்காகப் பிரிப்பதுதான் தீர்வு என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கானா விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாத காங்கிரஸ், இது மிகவும் நாசூக்கான விஷயம் என்று கருத்து கூறியுள்ளது. பாஜக-வோ இது மக்களைத் திசை திருப்பும் வெறும்  கண் துடிப்பு நாடகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளன. ஆக, இவர்களின் நிலை என்ன என்று வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை.

மறைமுகமாக பாஜக சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப் படுவதையே விரும்பும் என்று நினைக்கிறேன். தெலுங்கானா  விலும் சற்றேரக் குறைய இதே நிலைதான். ஏனென்றால் அதில் ஒன்றிரண்டு முதலமைச்சராக ஆக வாய்ப்பு கிட்டும். புள்ளிவிவரங்களை மாற்றி கட்சி வளர்ந்துள்ளதாக – அதாவது 2000 ஆண்டில் அத்தனை முதல்வர்கள், இன்று இது இத்தனையாக உயர்ந்துள்ளது – என்று காட்டிக் கொள்ளலாம்.

காங்கிரசுக்கும் ஓரளவு ஏற்புடையதாக – atleast யுவராஜனின் கைங்கர்யத்தால் வென்றதாகக் கணக்கு காட்ட உதவும் என்பதால் – ஏற்புடையதாகவே இருக்கும். மேலும், சில வருடங்களுக்கு முன்பே ராகுல் உத்திர பிரதேசத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் (அப்போது உத்திர பிரதேசத்திலிருந்து ஹரீத் ப்ரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த அஜித் சிங் – முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகன் – உடன் கூட்டு வைத்திருந்ததால் கூட இருக்கலாம். (அது அஜித் சிங் பலமாக இருந்த அவர் ஜாதியை சேர்ந்த ஜாட்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதை ஊகித்திருந்தால் நீங்கள் இந்திய அரசியல் வாதிகளைப் பற்றி சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று பொருள்). ஆனால், இன்றைய நிலையில் இது தெலுங்கானா பிரிவினைக்கு போராடுபவர்களுக்கு மேலும்  சாதகமாக இருக்கும் என்பதால் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம்.

மாயாவதியைப் பொறுத்தவரை இது உடனடியாக நடக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே நேரம் தேர்தல் வருவதால் மக்களைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாயம். [மேலும், அப்படியே பிரிக்கப் பட்டாலும் இரண்டு மாநிலத்தில் – at least பச்சிம் ப்ரதேசத்திலாவது – அவருக்கு வாய்ப்பு கிட்டும். அவர் ஒருவருக்கு தானே, அதுவே போதும். இரண்டு மாநிலம் ஆகிவிட்டால், மம்தா பானர்ஜி யாருக்கு மத்திய அமைச்சர் பதவி  கொடுப்பது என்று குழம்பியது போல் குழப்பம் வேறு வரும்.] ஏதோ குட்டையைக் குழப்பலாம் என்று தான் இதை அறிவித்திருப்பதாகவேத் தெரிகிறது. ஆனாலும், பிரிவினைக்கான விதையைத் தூவிவிட்டு விட்டார்.

[ஒரு சின்ன diversion : நோய்டாவைப் பொருத்தவரை மாயாவதிதான். நோய்டாவின் இன்றைய முன்னேற்றம் தில்லியின் வளர்ச்சியை ஒட்டியதாகவும், தேசிய தலைநகர் பகுதியில் இடம் பெற்றிப்பதாலும் என்றாலும் கூட, இங்குள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அவரின் செயல்கள் யாராலும் மறுக்க முடியாது. அதிலும், முலாயாம் ”அம்மா” ஜெயலலிதாவின் சிஷ்யனாக முந்தைய மாயாவதி அரசின் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தியது, பஸ் வசதிகளில் செய்த குளறுபடிகள் ஆகியவற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மேலும், அவரது சொந்த தொகுதி வேறு நோய்டாவை ஒட்டி இருக்கிறது.]

முலாயம் சிங்கைப் பொறுத்தவரை இது மாயாவதியின் திட்டம் அதனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே அவரும் இதை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார்.

இந்தியாவிற்கு பெரும்பாலான பிரதமர்களைத் தந்து இந்திய அரசியலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த உத்திர பிரதேசம் இன்னும் எத்தனை நாள் இந்திய வரைபடத்தில் முழுமையாக இருக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் தர இயலும்.


புதன், நவம்பர் 16, 2011

மல்லையாவை கைத்தூக்கி விடுவோம்


சென்ற ஒரு வாரமாக ஒரு விஷயம் தான் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தீராத கவலையாக மனதை வாட்டி வருகிறது. அது விஜய் மல்லையாவின் “கிங்பிஷர்” நிறுவனம் அடைந்துள்ள 7000 கோடி நஷ்டமும் தான்.

பாவம் விஜய் மல்லையா 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டால் அவரால் என்ன செய்ய முடியும்? எப்படி IPL, Grant Prix  போன்றவற்றில் ஈடுபடமுடியும்? புது வருடம் வேறு வருகிறது. மாடல் அழகிகளை எப்படி படம் பிடித்து calendar வெளியிட முடியும். அவர் மகனை எப்படி Bollywood நடிகைகளுடன் பழக வைக்கமுடியும். டாஸ்மாக் supply வேறு பார்க்க வேண்டும். அவருக்கு எத்தனை கவலைகள்.

மேலும் அவர் நாம் விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்றுதானே நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விமான நிறுவனம் நடத்துகிறார். அது மட்டுமா அதே தொழிலில் இருக்கும் indigo நிறுவனம் மக்கள் மேல் அக்கரையின்றி லாபம் அடைந்து –  அதற்கு காரணம் நல்ல நிர்வாகம் என்று பொய் கூறி – வருவதை  போலல்லாமல் மக்களுக்காகவே உழைக்கும் நிறுவனம் அதுவல்லவா? அதனால் தான், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார் என்பது தான் அனைவருடைய பிரார்த்தனையாக இருக்கும்.

மேலும்,  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!!! என்பதையும் கவனிக்க வேண்டும்.

நம் பிரதமருக்கு மிகவும் இளகிய மனம். அதனால் தான் விஜய் மல்லையாவின் கவலைகளை நன்கு புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய நினைக்கிறார் போலிருக்கிறது.

இல்லையென்றால் தினம் தினம் உயரும் விலைவாசி பிரச்சனை - உணவு, பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம் அதை தொடர்ந்து ஏறு முகமாகவே இருக்கும் inflation, பெருகிவரும் ஊழல், தெலுங்கானா, கூடங்குளம் ஆகியவற்றின் மக்கள் போராட்டங்கள் போன்ற நாட்டின் தலையாய பிரச்சனைகளில் வாயையே திறக்காமல் மேலிடத்தின் உத்தரவிற்காகக் காத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், இப்போது கிங்பிஷர்-ஐ bailout செய்வதைப் பற்றிக்  கவலைப் பட்டுள்ளார்.
 எனவே.  அவரை bailout செய்து கைத்தூக்கிவிடுவது நம் கடமை.
இல்லையென்றால் அவர்க்கென்ன இருக்கவே இருக்கிறது, ABCL-ல் அமிதாப் செய்தது போல் ஒரு மஞ்சள் காகிதம் கொடுத்தால் போதும். நஷ்டப்படப் போவது அந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களும் அவருக்கு கடன் கொடுத்த SBI வங்கியும் தானே.
என்ன SBI-இல் இருப்பது யாருடைய பணம்? முதலீட்டாளர்கள் சாதாரண மக்கள் இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள்.

உங்களுக்கு குசும்பு அதிகம் தான். நீங்கள் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். இன்றைய தேதியில் விற்கும் விலைவாசியில் வங்கியில் பணம் சேமிக்கவோ பங்குகளில் முதலீடு செய்யும் அளவுக்கு வசதியாக மக்கள் இருக்கிறார்களா?

எனவே, விஜய் மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவது அரசின் கடமை. சரிதானே!!!

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஐந்து நாள் போட்டிகளின் முடிவு


நேற்று காலை கல்கத்தாவில் இரண்டாவது ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கின.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றி;
இந்தியா டாஸில் வென்று முதலில் மட்டையாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது;
சச்சின் 100வது சதத்தை எட்ட இருந்த எதிர்பார்ப்பு
இன்றும் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருந்த்து.
அதுவும், கல்கத்தாவின் செல்லப் பிள்ளை லக்ஷ்மண் சதம் எடுத்த நிலை.
-       மைதானம் நிரம்புவதற்கான அனைத்து அம்சங்களும் இருந்தன.
ஆனால், மைதானத்தில் இருந்தவர்களோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் சொற்பமானவர்களே. இங்கிலாந்து தவிர அனைத்து இடங்களிலும் ஐந்து நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.

இதன் காரணம் என்னவாக இருக்கும்?

1.    இங்கிலாந்து தொடரில் இந்தியா பெற்ற தொடர் தோல்விகளால் இந்தியா தன் வீட்டில் மட்டுமே வெல்லும் என்ற விரக்தி;
2.    தற்போதய மேற்கிந்திய அணி (குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து ஆடுவதில்) அத்தனைத் திறன் பெற்ற அணி இல்லை;
3.     ஐந்து நாட்களை வீணாக விளையாட்டிற்காக செலவிடுவதா என்ற மன நிலை;
4.    ஆடுகளங்களின் (மோசமான) நிலைமை;
5.    தொழில் நுட்ப முன்னேற்றத்தால் மைதனத்திலிருந்து பார்ப்பதைவிட வீட்டில் நன்றாக பார்த்து ரசிக்க முடிவது  அல்லது அலுவலகத்தில் தொலைகாட்சியிலும் வலையிலும் ஸ்கோர் தெரிந்துகொள்வது;
போன்றவற்றால் பொதுவாக ஐந்து நாள் போட்டிகளை மைதானத்தில் பார்ப்பது குறைந்திருந்தால் அது பரவாயில்லை.

ஆனால், இது ஐந்து நாள் என்ற பொன் முட்டையிடும் வாத்தை ஐபிஎல் என்ற முட்டைக்காகக் கொல்வது என்ற நிலையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. பொதுவாகவே supply அதிகம் ஆகும் பொழுது அதன் தேவை குறையும். ஒருவேளை அதிக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல், சாம்பியன் ட்ராஃபி போன்றவை தான் காரணம் என்றால், அவற்றைக் குறைக்க வேண்டியது தான் இப்போதைய தேவை. ஐபிஎல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் இடைப்பட்ட வருட்த்தில் சாம்பியன் ட்ராஃபியும் நடத்தலாம்.

ஆனால், இன்றைய ஆட்டங்களின் பட்டியல்கள் நிறைவுற்ற நிலையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை ஐசிசி கூட ஐந்து நாள் சாம்பியன் தொடரை நடத்துவது 2017-க்கு முன் சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்டது.

மைதானத்தில் ஆட்களே இல்லாமல், தொலைக்காட்சி உரிமையை மட்டும் வைத்து ஒரு தொடரை நடத்துவது சாத்தியமா? ஆட்டக்காரர்கள் அதை விரும்புவார்களா?

இது ஐந்து நாள் ஆட்டத்தின் முடிவா? காலம் தான் இதற்கு பதில் தர முடியும்.

புதன், நவம்பர் 09, 2011

கலவை – 8


தமிழகத்தை மழை அடித்துத் துவைத்துவரும் இந்த வேளையில் தில்லியிலும் குளிர் மெதுவாக ஆரம்பித்து வருகிறது. நான் 1990 களில் வந்த புதிதில் குளிர் பெரும்பாலும் அக்டோபர் மாதத் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிடும். குளிர் மார்ச் மாத இறுதிவரை இருக்கும்.. ஆனால், மெதுவாக இந்த நிலைமாறி இப்பொழுதெல்லாம், நவம்பரின் பிற்பாதியில் ஆரம்பித்து பிப்ரவரியிலேயே முடிந்துவிடுகிறது. புவிவெப்பம் தான் காரணம். ஃப்ரிட்ஜும் குளிர்சாதனப் பெட்டியும் வைத்துக் கொண்டு ஓசோன் படலத்தை ஓட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றைத் தவிர பிலாஸ்டிக், மருத்துவ, வேதியல் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் என்று நாளும் பூமியை மெதுவாக வாழ்வதற்கு ஒன்னாத ஒரு பிரதேசமாக ஆக்கிவருகிறோம்.

பிளாஸ்டிக் கழிவுகள் என்றது ஒரு செய்தி. சபரிமலையையும் அதன் சுற்றுப் புரங்களையும் (பம்பைவரை) ஒரு பெரிய சுத்தம் செய்யும் பணி 6000 தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதில் அமிர்தானந்தமயி மடத்திலுருந்து 3000 பேரும் மற்ற சிறிய பெரிய நிறுவனங்களிலிருந்தும் அரசு சாரா அமைப்புகளிலிருந்தும் 3000 பேரும் சேர்ந்து இந்த பணியைச்  செய்கின்றனர். இந்த பகுதியில் zero waste zone ஆக்குவதுதான் அவர்களின் நோக்கமாம். இதைப் பார்த்தவுடன் ’நம்மவர்’ படத்தின் ”சுற்றம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

’நம்மவர்’ கமலுக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்த நடிகர். சிவாஜிக்குப் பின் அவரது கலை உலக வாரிசு என்றால் அது கமல் தான். அதே போல் எம்.ஜி.ஆர். போல் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் இவருக்கு உண்டு. சிவாஜியின் நடிப்பு இவரிடமும் style ரஜினியிடமும் போனது போல், MGR-ன் தொழில் நுட்ப ஆர்வம் இவரிடமும் மக்கள் கூட்டம் ரஜினியிடமும் சென்றுவிட்டதாகவே கூறலாம். அதே நேரம் MGR-ஐ விட ரஜினி எப்படி நல்ல நடிப்பாரோ அதே போல் அவரைவிட கமலின் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் அதிகம். எனக்கு மிகவும் பிடித்த 10 கமல் படங்கள் இவை:-

1.    அன்பே சிவம்
2.    ஹே ராம்
3.    குருதிப்புனல்
4.    சிகப்பு ரோஜாக்கள் [style என்றால் சாதரணமாகப் பார்ப்பது கூட என்பது இந்த படத்தில் புரியும்]
5.    மைக்கேல் மதன காம ராசன்
6.    நாயகன்
7.    மகாநதி
8.    16 வயதினிலே
9.    அபூர்வ சகோதரர்கள்
10.  எல்லாம் இன்ப மயம் [’ஆசை கிளியே பர்லா’வும் ‘மாமன் வூடு’ம் என் fav. பாட்டு]


சென்ற கலவையில் மக்கள் தொகை 7 பில்லியன்களை எட்டியதைப் பார்த்தோம். அதில் ஓர் ஆச்சரியமானத் தகவலை விட்டுவிட்டேன். சீனாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓர் ஆச்சர்யமான தகவல் இருந்தது. அந்நாட்டில் தற்பொழுது 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 49000த் தாண்டிவிட்ட்தாம். ஜூன் வரை அது 48900 ஆக இருந்ததாகவும் சீனாவின் ஜெரொண்டொலாஜிகல் சொசைடி என்ற அமைப்பு கூறுகிறது. இது சென்ற ஆண்டைவிட 5000 அதிகமாம். லுயோ மெழ்ஹென் என்ற 126 வயது பெண்மணிதான் அந்நாட்டில் தற்பொழுது மிகவும் முதியவராம்.

நூறு என்றவுடன் நம் ஞாபகத்திற்கு வருபவர் சச்சின். இன்று 100வது சதத்தை அடித்துவிடுவார் என்று நினைத்திருந்தேன். அதிலும் முதல் session-ல் எட்வர்ட்ஸின் பந்துகளை அவர் எதிர் கொண்ட விதம் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. ஆனால், கடைசியில் short length-ல் வந்த பந்தை விட்டு காலில் வாங்கி அவுட். 76 ரன்கள்.  நேற்று அவர்  15000 ரன்கள் எடுத்த உடனேயே எழுத நினைத்தேன்.  ஆனால், இன்று பார்த்துவிட்டு சதத்தையும் சேர்த்து எழுதலாம் என்று இருந்தால் இப்படி 76-ல் அவுட் ஆகிவிட்டார். எத்தனையோ சாதனைகள். ஆனாலும், முச்சதம் அடிப்பது, இன்றைய நிலையில், கடினம் தான் என்று நினைக்கிறேன். Fitness-தான் பிரச்சனை. அதுதான் அவர் கவனத்தையும் திசைத் திருப்புகிறது என்று நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மைதானம் சற்று சிறியதாக இருக்கும் (எல்லைக் கோடுகள் குறுக்கப் படுவதால்). மேலும் அதில் attacking விளையாடலாம். ஆனால் அவர் தற்போது (டெஸ்டில்) அப்படி ஆடுவதில்லை. ஆனால், அப்படி அவரை சாதாரணமாக கழித்து கட்டிவிட முடியாது என்பது தான் அவருடைய பலம். பொறுத்திருந்து பார்ப்போம்.

சாதாரணமாக, அவர் முதல் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் [சேவாக், திராவிட் ஆகியோரும் கூட]. ஆனால், லக்ஷ்மண், கம்பீர் போன்றவர்கள் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டக்காரர்கள். அதனால் அவர்கள் match winner-களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனாl சச்சின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் match winner இல்லை என்பதுதான். ஆனால் சச்சின் டெஸ்ட்களில் சதம் அடித்த 51-ல் 17 வெற்றி; 11 தோல்வி, 23-ல் டிரா. அதுவே ஒருநாள் போட்டிகளில் 49-ல் 33 வெற்றிக்காக. அதிலும், ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அவர் முதல் ஆட்டக்காரராகக் களமிறங்குவதால் பெறும்பாலும் இறுதிவரை ஆட முடிவதில்லை. எனவே, அவரை finisher இல்லை என்று குற்றம் சாட்டினால் அது ஓரளவுக்கு சரி. ஆனால், match winner இல்லை என்பது அவர் மீது உள்ள காழ்புணர்வே.