செவ்வாய், டிசம்பர் 13, 2011

புதுதில்லி - நூறு வயது


தில்லி என்றுமே இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகித்துதான் வந்துள்ளது. வரலாற்றின் ஆரம்பங்களில் பாட்னாவே (பாடலிபுத்திரம்) இந்திய அரசியலின் மையமாக இருந்தாலும் புராண காலங்களிலேயே  தில்லி (இந்திர பிரஸ்தம் என்ற பெயரில்)  ஒரு முக்கிய நகரமாகவே இருந்துள்ளது. மகத குப்த பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் கி.பி.700 களின் பிற்பகுதியில் தோமர்களால் மறுசீரமைக்கப் பட்ட தில்லி முகமது கோரியால் (சஹாபுதின் முகமது இயர்பெயர்; கோர் என்பது அவரது ஊர்/வம்ச பெயர்இது இன்றைய ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ளது) 1192-ல் கைப்பற்றப்பட்டதுதான், கெட்டவற்றிலும் ஒரு நன்மைபோல, மிகப் பெரிய திருப்புமுனை. கோரி முகமதின் மறைவிற்குப் பின் அவரது அரசு அவரின் அடிமைகளால் பிரித்துக் கொள்ளப் பட்டு தில்லி, குத்புதின் ஐபக் வசம் 1206-ல் வந்தது (தஜுதின் இல்தொஸ்கஜினி; நஸ்ரூதின் குல்பச்சாமுல்தான்;  இக்தியார் உதீன் முகம்மதுவங்காளம் என மற்றவர்களால் பிரித்துக் கொள்ளப் பட்டது). அதன் பின் தில்லி இந்திய வரலாற்றின் ஓர் முக்கிய அங்கமாகவும் இந்தியத் துணைகண்டத்தின் அறிவிக்கப்படாதத் தலைநகராகவும் இருந்து வந்துள்ளது. 1200களுக்குப் பின் தில்லி பின் வரும் வம்சங்களால் ஆளப்பட்டது. அவை,

1206-1290       அடிமை வம்சம்
1290-1320       கில்ஜி வம்சம்
1321-1398       துக்ளக் வம்சம்
1414-1451       சையது வம்சம்
1451-1526       லோதி வம்சம்
1526-1857       முகலாயர்கள்

இதில் 1398-1414 வரை தில்லி மட்டுமள்ள வட இந்தியாவின் பெரும்பகுதி தைமூரின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி இருந்திருக்கிறது. குறிப்பாக 1398 (17th December) தைமூரின் படைகள் தில்லியைத் தாக்கி சரணடைந்த சுமார் 1 லட்சம் பேரை ஒரே நாளில் கொண்று குவித்தது. இத்தனைக்கும் தில்லி சுல்தான் அவரை, வழியில் குறுக்கிட்ட ஜாட்டுகள் அளவுக்குக் கூட எதிர்க்கவில்லை. [இந்த மத்திய ஆசிய அரசர்களின் படையெடுப்பும் கில்ஜிகளால் வெல்லப்பட்டத் தென்னிந்தியாவில் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும் தான் முகமது பின் துக்ளக் தலைநகரை தேவ்கர் நகருக்கு மாற்ற நினைக்கக் காரணம்; ஆனால், அது முழுவதுமாக நிறைவேறாமல் இருந்ததால் தைமூரின் படையெடுப்பு வடக்கோடு நின்று விட்டது]  1399 இறுதியில் தைமூர் ஹரித்வார் வரைச் சென்று அதை அங்கு அழிவுகளை நிகழ்த்திவிட்டு தன் தலைநகர் திரும்பினான். 1405-ல் தைமூர் மறைந்தாலும் அவரது மகன்களிடம் இருந்த பயமும் வேறு பெரிய வம்சம் எதுவும் உயிர்ப்புடன் இல்லாததாலும் 1414 வரை அது தைமூர் வம்சத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த தில்லியின் அரசாட்சியை மீட்க யாராலும் முடியவில்லை. 1414-ல் சையது வம்சமும் தைமூர்களால் முல்தானின் கவர்னர்களாக நியமிக்கப் பட்டவர்களே. ஆனால், அவர்கள் தில்லியையும் தம் வசமாக்கிக் கொண்டனர். பின், தில்லியின் ஆட்சி லோதி வம்சத்திற்குக் கிட்டியது. பின்னர் 1526 பானிபட் (முதல்) போருக்குப் பின் அது முகலாயர் வசமானது. [இடையில் 1540-1553 வரை சூரி வம்சத்தினராலும் 1553-56 வரை ஹெமு விக்ரமாதித்யா என்ற இந்து மன்னராலும் ஆளப்பட்டது]. 1707-ல் ஔரங்கசீப்-இன் மறைவிற்குப் பின் தில்லி பல சோதனைகளைச் சந்தித்தது. குறிப்பாக, மத்திய ஆசிய அரசர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆள்வதை விட அதன் செல்வங்களைக் கொள்ளையிடவே நினைத்தார்கள். காரணம், இமயமலை; மத்திய ஆசியாவிலிர்ந்து தொடர்ந்து அதை அரசாள்வதைவிட ஓரிரு முறை கொல்லையடிப்பது எளிதாக இருந்தது தான். மீண்டும் 1738-ல் நாதிர் ஷா வினால் தில்லி சூறையாடப் பட்டது. 1752-ல் மராத்தியர்கள்(!!!) முகலாயர்களுக்கு தில்லியைக் காப்பதில் உதவினர். மராத்தியர்களின் ஆட்சி தில்லியைத் தவிர வட இந்தியா முழுவதும் பரவியிருந்தது. மூன்றாம் பானிபட் போரில் (1761) மராத்தியர்களின் தோல்விக்குப் பின் அஹ்மத் ஷா அப்தலியால் மீண்டும் சூறையாடப் பட்டது. பின் முகலாயர் வசம் இருந்த தில்லியை கிழக்கிந்திய கம்பெனி 1803-ல்  கைப்பற்றியது. பெயரளவுக்கு அரசர்களாக முகலாய வாரிசுகள் இருந்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின் (முதல் இந்திய சுதந்திர போர்!!! என்று அழைக்கப்படும்) காரணமாக பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டப் பின் தில்லி பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து பஞ்சாப் மாகாணத்தில் அடங்கியிருந்தது.

பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜின் இந்திய வருகையின் பொழுது 1911 (December 11)-ல் கல்கத்தாவிலிருந்து தில்லி இந்திய தலைநகராக மாற்றப் பட்டது. தொடர்ந்து எட்வின் லுடைன்ஸ் புது தில்லி வடிவமைக்கப் பட்டு 20 வருடங்களில் அது செயல் படத் துவங்கியது. புதுதில்லியின் வைச்ராய் ஹவுஸ் (தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை), பரோடா ஹவுஸ், ஹைதராபாத் ஹவுஸ், பிகானிர் ஹவுஸ், படியாலா ஹவுஸ், ஜெய்பூர் ஹவுஸ் ஆகியவை லுடைன்ஸால் வடிவமைக்கப் பட்டவையே.

முதலில் தில்லி அரசு இந்த நூறாவது ஆண்டு நிறைவை, இது காலணி அதிகாரத்தின் மிச்சம்; அதனால் அலுவலகப் பூர்வமாகக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தது. ஆனால், வரலாற்று ரீதியாக இது ஒரு முக்கியமான நிகழ்வு. இதைச் சரிவர விளம்பரப் படுத்தி இருந்தால் சுற்றுலா பயணிகளையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்த்திருக்கலாம். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தை இதனால் வரலாற்றிலிருந்து அகற்றிவிட முடியுமா? அரசு அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடாவிட்டாலும், சுற்றுலாத் துறையாவது சரியாக விளம்பரம் செய்து தனி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பித்திருக்கலாம்.
 கடைசியில், இது தனியாரும் பள்ளிகளும் கொண்டாடுவார்கள் என அறிவித்தது. நேற்று முன் தினம் இந்தியா கேட் பகுதியில் கொண்டாட்டங்கள் நடந்தன. ’ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல்’ வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு, சாதாரணமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

8 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு.
    சிறப்பாக கொண்டாடி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருக்கலாம்.......

    பதிலளிநீக்கு
  2. வரலாற்று சிறப்புகளைச் சாதாரணமாகவே நம் மக்கள் கவனிப்பதில்லை. ஊடகங்களும் கூட (ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், ஹிந்துவில் Young World மற்ற நாளிதழ்களில் சில கட்டுரைகள் தவிர) பெரிதாக எதுவும் இல்லை. தொலைக்காட்சிகள் கூட இந்த நிகழ்வைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என்பது தான் வருத்தம்.

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை! வாழ்க.

    //மத்திய ஆசிய அரசர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆள்வதை விட அதன் செல்வங்களைக் கொள்ளையிடவே நினைத்தார்கள்.//

    இப்போது தில்லியை தேர்தலில் கைப்பற்றினால் இந்தியாவையே கொள்ளையடிக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  4. வாங்க பத்து,

    அது நடந்து கொண்டு தானே இருக்கிறது. சில நேரங்களில் மாநிலமே (உதாரணம் - உத்திர பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா) போதும். ஆனால் நீங்கள் ராசாவாக வேண்டுமானால் தில்லியைத் தேர்தலில் கைப்பற்ற வேண்டியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. தில்லிக்கு இவ்ளோ ரகசியங்கள் இருந்திருக்கா.நூறாவது ஆண்டு நிறைவா?அதுவும் எனக்குத் தெரியாது.தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆச்சி,

    புதுதில்லி இந்தியாவின் தலைநகராகி நூறு ஆண்டுகள் ஆன விவரம், தில்லிக்கு அருகிலேயே இருக்கும் உங்களுக்குக் எட்டும் அளவுக்குக் கூட அரசு, ஊடகங்கள் இந்தத் தகவலை விளம்பரப் படுத்தவில்லை என்பது வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு