வியாழன், நவம்பர் 08, 2012

ஆசியப்புலியும் அடங்கா நோயும்


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் தொடர்ந்து டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. தில்லியின் மூன்று நகராட்சிப் பகுதிகளில் மட்டும் இதுவரை 1250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று உயிர்களும் பலியாகியுள்ளது.

எகிப்தி
இந்த டெங்குக் காய்சலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது ஆசியப் புலிக் கொசு என்றழைக்கப்படும் அயிடெஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) என்ற புதிய வகைக் கொசுக்களாகும். இவை சாதாரணமாக நம் வீட்டில் உருவாகும் அயிடெஸ் எகிப்தி (Aedes Aegypti) வகையிலிருந்து மாறுபட்டு திறந்த வெளி பூங்காக்கள் தோட்டங்கள் ஆகியவற்றில் உருவாவதாகக் கண்டறிந்துள்ளனர். எகிப்தி வகைக் கொசுக்கள் சாதாரணமாக மழைக்காலங்களில் இருள் கவ்விய இடங்களில் தேங்கியத் தண்ணீரில் உருவாகும். இவையே மழைக்காலங்களில் உண்டாகும் டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமாக (சென்ற ஆண்டுகள் வரை) இருந்தன. இவை முதலில் ஆப்பிரிகாவில் (எகிப்த்தில்!?) உருவாகி பின் உலகம் முழுவதும் பரவியதாகக் கூறுகிறார்கள். இவற்றின் பெண் கொசுக்களே டெங்கு பரவ காரணமாக இது நாள் வரைஅறியப்பட்டவை. இவை அதிக குளிரிலோ அதிக வெய்யிலிலோ உயிர் பிழைக்காது; ஆகையால், இடைப்பட்ட இந்த மழைக் காலங்களில் அதிகமாக இருக்கும். சாதாரண கொசு அழிப்பு மருந்துகள் இவற்றின் உருவாக்கத்தைப் பெருமளவில் தடுத்துவந்தன.
அல்போக்டஸ்


ஆனால் தற்போது கண்டறியப்பட்ட இந்த அல்போபிக்டஸ் கிழக்கு அல்லது தென் கிழக்கு ஆசியாவில் உருவாகியவை என்று கூறுகின்றனர். [அல்போபிக்டஸ் என்பது ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடைப்பட்டப் பகுதியைக் குறிக்கும்] எகிப்தி போலன்றி இவை புது இடங்களில் தங்களை அதற்கேற்ப எளிதாக தயார் படுத்திக் கொள்வதாகவும் கூறுகின்றனர். இவை மிருகங்களை விட மனிதர்களின் இரத்தத்தையே பெருமள்வில் விரும்புவதாகவும் கூறுகின்றனர். ஒரே ஆறுதல் என்றால் எகிப்தி வகையால் உருவாகும் டெங்குவை விட இதனால் உருவாகும் டெங்கு அதிக அபாயமற்றது என்று கூறுகிறார்கள். பாதிப்பு அதிகம் இருந்தாலும் குணமாக்குவது கடினம் இல்லை என்று கூறுகின்றனர்.

இந்தப் புதுவகைக் கொசுக்களைப் பற்றிப் போதிய தகவல்கள் இல்லாததால் பழைய எகிப்தி வகைக் கொசுக்களை அழிக்கும் மருந்துகளையே இதுவரை உபயோகித்து வருகின்றனர். ஆனால், அம்மருந்துகளால் இக்கொசுக்களை இதுவரை அழிக்கவோ அவற்றின் உருவாக்கத்தைத் தடுக்கவோ முடியவில்லை.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தில்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.கெ.வாலியா நகராட்சிகள் தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்க இது மாதிரி செய்திகளைக் கூறுகின்றன என்றும் கொசுக்களை அழிக்கவும் அவை மேலும் உருவாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார்.

எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுத் தற்போது குணமடைந்துள்ளனர். பொதுவாக டெங்கு-வால் பாதிக்கப்பட்டால் அதிக காய்சல் வருவதுடன் இரத்தத் தட்டுகளின் (blood platelets) எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும். சாதாரணமாக ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் 1½ லட்சம் முதல்  4 லட்சம் செல்கள் இருக்க வேண்டிய நிலையில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து இரத்தம் நீர்த்து தோலின் துளைகள் (pores) வழியாக, குறிப்பாக மெல்லியத் தோல்களைக் கொண்ட மூக்கு, உதடுகள், வாய் வழியே வெளியேரும். இதற்கு தனியாக மருந்து இல்லை. காய்ச்சலுக்கு வெறும் paracetemol மட்டுமே கொடுக்க வேண்டும். ஆஸ்பிரின், ப்ருஃபென் கலந்த பாரசிடமால் கொடுக்கவே கூடாது; ஏனென்றால் அவை இரத்தத்தை நீர்க்கச் செய்வதை அதிகரிக்கும். பப்பாளி இலையைப் போட்டுக் காய்ச்சிய நீர் இந்த செல்களை அதிகரிக்கச் செய்வதாகக் கூறுகின்றனர். இளநீர், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவையும் நல்லது என்கின்றனர்.

15 கருத்துகள்:

  1. டெங்கு பற்றி விரிவான தகவல் தந்தமைக்கு நன்றி.
    சுற்றுப்புறம் கொசுக்கள் வளர ஏதுவான சூழலாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! வீடு சுத்தமாக இருந்தால் போதுமென்று குப்பைகளை குப்பைக் கூடையில் போடாமல் சாலையிலேயேப் போட்டுவிடுகிறோம். அவை சாக்கடைகளை அடைத்துக் கொண்டு தண்ணீர் தேங்க ஏதுவாக அமைந்து விடுகின்றன.

      வருகைக்கு நன்றிகள் முரளி!

      நீக்கு
  2. அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய தகவல் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கொசுக்களைப் பற்றி மட்டுமில்லை... டெங்கு ஜுரத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள விரிவான தகவல்கள் அடங்கிய பகிர்வு. நன்றி ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
  4. அறிவியல் தமிழாக்கம் சிறப்பாகவே உங்களுக்கு கைகூடுகிறது. தி ஹிந்து பத்திரிகையில் நான் படிக்கிற பகுதிகள் அனைத்தையும் நீங்களும் படிக்கிறீர்கள் என்று புரிகிறது. நூல் மொழியாக்கப் பணி மேற்கொள்ளும் ஆர்வம் இருந்தால், தொலைபேசவும்.

    பதிலளிநீக்கு
  5. விளக்கமான பயனுள்ள பகிர்வு... அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

    நன்றி...
    tm3

    பதிலளிநீக்கு
  6. ஆ ஊன்னா கூட்டம் கூட்டமா கிளம்பிடுறாங்க ..இந்த கொசுக்கள்

    இப்போ புதுசா அயிடெஸ் அல்போபிக்டஸ் -சா ரைட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாகக் கொசுக்கள் குளுசிடே (Culicidae) என்ற பெயரால் குறிப்பிடப் படுகின்றன. அயிடெஸ் என்பவை டெங்கு, சிக்கன்குனியா ஆகியவற்றைப் பரப்புவதாகவும், அனொபெலெஸ் என்பவை மலேரியாவை பரப்புவதாகவும் கூறுவர். இவை இரண்டும் அமைப்பில் வேறுபடும். அனொபெலெஸ் வகைக் கொசுக்களின் லார்வாவிற்கு மூச்சுக் குழல் கிடையாது. எனவே இவை இரண்டின் லார்வாக்களையும் அழிக்க வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களில் தோன்றிய அயிடெஸ் அந்த பிரதேசங்களின் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. உதா. எகிப்தி ஆப்பிரிகாவிலும் அல்போபிக்டஸ் ஆசிய பசபிக் பகுதிகளிலும் உருவானவை.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  7. விரிவான தகவல்கள். எனது நண்பர் ஒருவரின் மகளும் இந்நோயினால் அவதிப்பட்டு இப்போது தான் தேறி வருகிறார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றாலும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடிகிறது என்பது தான் நல்ல விஷயம். காரணம், மருந்துகள் / மருத்துவ வசதிகள் போதிய தயார் நிலையில் இருப்பதா அல்லது நாம் இதற்கு (டெங்கு வைரஸுக்கு) immune ஆகிவிட்டோமா என்று தெரியவில்லை!!!

      வருகைக்கு நன்றிகள் வெங்கட்!

      நீக்கு
  8. சரியான நேரத்தில் சரியான, தேவையான பதிவு ஸ்ரீனி!

    சிக்கன்குனியா சிக்கன் சாப்பிட்டால் வருமா என்று என் மாணவி ஒருத்தி கேட்டபோது நொந்து போனேன். விழிப்புணர்வு என்பது நம் மக்களிடையே எப்போது ஏற்படப் போகிறது?

    தெளிவான விளக்கங்கள்.

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு