புதன், ஆகஸ்ட் 21, 2013

ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?


வட மாநிலங்களில் ரக்ஷாபந்தனம் என்ற பண்டிகைக் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரர்களுக்கு கையில் ‘ராக்கி’ என்ற கயிற்றைக் கட்டி தங்கள் அன்பைத் தெரிவிப்பார்கள்.

இந்தப் பண்டிகை வட இந்தியர்களின் ‘ச்ரவண’ மாதத்தின் பௌர்ணமியன்றுக் கொண்டாடப்படும். இந்த வருடம் பொதுவாக நாட்காட்டிகளில் 20.08.2013 அன்று ரக்ஷாபந்தனம் என்று போட்டிருந்தாலும் சிலர் 21.08.2013 அன்று கொண்டாடுகிறார்கள். [என் மகள் பள்ளியில் நேற்று விடுமுறை விட்டிருந்தார்கள்; ஆனால் என் மகனின் பள்ளியில் இன்றுதான் விடுமுறை].

காரணம் என்ன? ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?

இந்த வருடம் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருக்கிறது. பௌர்ணமியின் முதல் பாகம் பத்ர கரணம் ஆகும் (கரணத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இந்த இடுகையில் எழுதியுள்ளேன்).

பொதுவாக பத்ர கரணத்தில் திருமணம், முடிகாணிக்கை, ரக்ஷாபந்தனம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவர்.

ரக்ஷாபந்தனத்தைப் பொறுத்தவரை அதற்கு ஏற்ற நேரமாக ப்ரதோஷ காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். பிரதோஷம் சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய முந்தைய பிந்தைய 10 நாழிகைகளைக் குறிக்கும். இந்த ஆடி மாதத்தில் பொதுவாக சூரிய அஸ்தமனம் மாலை 7 மணியளவில் இருக்கும். ஆகவே பிரதோஷ நேரமாக மாலை சுமார் 5 மணியிலிருந்து சுமார் 9 மணிவரை குறிப்பிடுவர்.

இந்த மாதப் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் மாலை 8.15 / 8.20 மணிவரையான முதல் பாதி (மொத்த பௌர்ணமி நேரமான சுமார் 22 1/2 மணி நேரத்தில் பாதியான 11 1/4 மணிநேரத்தை காலை 10 மணியுடன் கூட்டினால் வரும் நேரம்) பத்ர கரணம்.

இந்த பத்ர கரணத்திற்குப் பின்னர் வரும் பௌர்ணமியின் பின்பாதி (பவ கரணத்தில்) ரக்ஷாபந்தனம் கொண்டாடலாம். பத்ர கரணம் முடிந்து 8.20 முதல் பிரதோஷம் முடியும் சுமார் 9 மணி வரையிலான நேரம்  மிகச் சிறந்த நேரமாகக் கருதப்பட்டு நாட்காட்டிகளில் நேற்றைய தினம் ரக்ஷாபந்தனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேற்கூறிய நேரங்கள் அனைத்தும் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், மற்ற சில சித்தாந்தைங்களை (சூரிய சித்தாந்தம், வாக்கிய பஞ்சாங்கங்கள் மற்றும் மற்றைய இடங்களில் பயன் படுத்தும் பஞ்சாங்கங்கள் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கங்கங்களில் இந்த நேரக் கணிப்புகள் வேறுபட்டுள்ளன. மேலும், சில ஜோதிடர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ரக்ஷாபந்தனம் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனால் சிலரால் ரக்ஷாபந்தனம் இன்று (21.08.2013) கொண்டாடப் படுகிறது.

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆம்! பண்டிகைகளேக் கொண்டாடுவதற்காகத்தானே! அது எந்த நாளில் வந்தால் என்ன?

      இருந்தாலும் ஒரு தகவலுக்காகத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே!

      வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. நல்ல பகிர்வு.

    க்ஷாபந்தனம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு