திங்கள், மார்ச் 04, 2013

கனாட் ப்ளேஸ் – புதுப்பிக்கும் பணி

 
தில்லியில் எத்தனையோ வியாபாரத் தளங்கள் இருந்தாலும் கனாட் ப்ளேஸ்-க்கு என்றுமே தனி இடம் உண்டு. மற்ற வியாபாரத் தளங்களைப் போலல்லாமல் இது நகரத்தின் மையத்தில் இருப்பது முக்கியக் காரணம்.

1933-ஆம் ஆண்டு ல்யூடியன் புது தில்லியின் அரசுக் கட்டடங்களை வடிவமைத்த பொழுது நகரத்தின் மையப்பகுதியில் ஒரு வணிக நகரத்தை அமைக்க எண்ணி வட்ட வடிவில் அமைக்கப்பட்டது இந்த இடம். இது ஐரோப்பிய கட்டிடக்கலையைக் கொண்டு கட்டப்பட்டது.

இந்த வியாபாரத் தளத்தில் 1940-ஆம் ஆண்டுக்கும் முன்னரே ஆரம்பிக்கப் பட்டு இன்றும் நடந்து கொண்டிருக்கும் சில கடைகளும் இருக்கின்றன. இங்கு சுமார் 300 பெரிய கடைகளும் 300 சிறிய கடைகளும் உள்ளன. தவிர 75 வங்கிகள், 4 சினிமா த்யேடர்கள், 400 அலுவலகங்களும் உள்ளன. சுமார் 80 உணவகங்களும் உள்ளன.

இந்த மார்கெட்டைத் தவிர அருகிலேயே ஜன்பத் மார்கெட்டும் இருக்கிறது. அருகில் புராதானச் சின்னமான அக்ரசேன் கி பாவ்லி (அக்ரசேனர் கிணறு) ASI-ஆல் பராமரிக்கப்பட்டும் வருகிறது

ஆனால், கடந்த மூன்று-நான்கு வருடங்களாக இந்த கனாட் ப்ளேஸ் பகுதிக்குச் சென்றவர்கள் ஏதோ போர்களத்திற்கு தான் வந்து விட்டோமோ என்று எண்ணுமளவுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டும், இடிபாடுகள் கொட்டியும் இருக்கிறது.

2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடபெற்றதைத் தொடர்ந்து தில்லியில் பல இடங்கள் அழகு படுத்தப்பட்டும் புது கட்டமைப்புப் பணிகள் பலவும் நடைபெற்றன. அதே நோக்கில் 2009-ஆம் ஆண்டு மேமாதத்தில் இந்த கனாட் ப்ளேஸ்-ஐ புதுப்பிக்கும் பணிகள் புது தில்லி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டிகள் முடிவடைந்த நிலையிலும் இந்த பணிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நீட்டிக்கப் பட்டுக் கொண்டே இருந்து வருகிறது.

முதலில் ஒரு மாதிரி வேலையாக சி-ப்ளாக் புதுபிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த வேளை திட்டமிட்டத் தரத்துடன் நடை பெறவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டது.

மாநகராட்சி 2005-ஆம் இஞ்சினியர் இந்தியா நிறுவனத்தை இந்த வேளைக்குத் திட்ட மேளாண்மை ஆலோசகராக (Project Management Consultant) ஆக நியமித்தது. அவர்கள் இத்திட்டத்தை 11 பாகங்களாகப் பிரித்து சிறுசிறு துணை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிட்டது. 2005-ஆம் ஆண்டு வெறும் 76 கோடி ரூபாயில் போடப்பட்ட திட்டம் 2007-ஆம் ஆண்டு 671 கோடியாக உயர்ந்தது.

முதலில் இத்திட்டம் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2011-ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவேறும் என்று அறிவித்தனர். அதுவும் பின்னர் 2012-ஆம் ஆண்டு மேமாதம் வரை நீட்டிக்கப்பட்டும் தற்போது 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை அடைந்து விட்டது.

இத்தனைக்கும் ஆரம்பத்தில் இங்கு உள்சுற்றையும் வெளிச்சுற்றையும் இணைக்கும் வகையில் 8 சுரங்கப்பாதைகள் திட்டமிடப்பட்டது. பின்னர் அது நான்காகக் குறைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான செலவும் 477 கோடி ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது புதுதில்லி மாநகராட்சி இத்திட்டத்தை மீண்டும் ஜூன் 30-ஆம் தேதி வரை  நீட்டித்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.

ஆக்ரா செல்பவர்கள் அங்கு ராதாஸ்வாமி மந்திர் என்ற கோவிலைக் கண்டிருப்பார்கள். அங்கு எப்பொழுதும் ஏதாவது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டே இருக்கும். அந்தக் கோவிலில் கட்டுமான வேலைகள் தொடர்ந்து நிறுத்தாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் தீமை விளையும் என்று நம்பப்படுவதாகவும், அதனால் 1904 ஆம் ஆண்டிலிருந்து வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என்று கூறப்படுவதுண்டு.

கனாட் ப்ளேஸின் இந்த புதுப்பிக்கும் பணியில் அது போன்ற விஷயம் இல்லாமல் இருந்தால் சரிதான்!

8 கருத்துகள்:

  1. என்னே சுறுசுறுப்பு...!

    /// இந்நிலையில், தற்போது புதுதில்லி மாநகராட்சி இத்திட்டத்தை மீண்டும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தீர்மானம் இயற்றியுள்ளனர். ///

    புதுதில்லி மாநகராட்சி ஜூன் 30-ஆம் தேதி வரை சொல்லி உள்ளது... எந்த வருடம்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடமெல்லாம் சொல்ல மாட்டார்கள்...

      வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. நமாளுங்கள திருத்தவே முடியாது.. அடுத்த காமன் வெல்த் வந்தாலும் கட்டிட்டே இருப்பாங்க போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமன்வெல்த் திரும்பவா?

      போனமுறை கல்மாடி; அடுத்த முறை எந்த மண்மாடியோ?

      நீக்கு
  3. சிந்து பாத் கதை கூட முடிந்து விடும் - ஆனால் இது முடியாது சீனு! :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு இழுக்கிறார்களோ அவ்வளவு காசு!
      எப்படி முடிக்க முடியும்...

      நீக்கு
  4. இரண்டு ஆண்டுகளுக்கு முன் டில்லி வந்தபோது கனாட் ப்ளேஸ் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு