புதன், நவம்பர் 23, 2011

குளிர்காலடக் கூட்டத் தொடரும் காத்திருக்கும் மசோதாக்களும்



ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் நேற்றிலிருந்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. இது அடுத்த மாதம் 23-ம் தேதி வரை நீடிக்கும்.

காத்திருக்கும் 80-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் 31 நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு சட்டமாக மாற பட்டியலிடப் பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமான சில:

  1. லோக்பால் மசோதா : மத்திய அரசு ஊழியர்களுக்கும் அரசில் பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் ஆம்பட்ஸ்மன் (ombudsman) அமைப்பை நிறுவுவதுதான் இதன் நோக்கம். இது இக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப் படாவில்ட்டால் மீண்டும் போராட்டத்தைத் துவங்க இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
  2. நீதித்துறைத் தரமும் பொறுப்பும் மசோதா : இது நீதித்துறை சமீப காலமாக தரம் இழந்து வருவதை தடுக்கக் கொண்டு வரப்பட இருக்கும் மசோதா. இது உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து கணக்கு வெல்ளியிடுவதையும் உள்ளடக்கியது.
  3. Whistleblower (தகவலளிப்பவர்!!) மசோதா : புகார் மற்றும் தகவல் அளிப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அப்புகார்களை விசாரிக்க உதவும் சட்டம்
  4. அரசியல் நிர்ணய சட்ட (108வது திருத்தம்): இது ஏற்கனவே 2010-ல் மாநிலங்கள் அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது. பல முறை தாக்கல் செய்யப் பட்ட போதும் இதை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாது என்று நிச்சயமாகக் கூறலாம். இந்த திருத்த்த்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இது தான் நாடளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தர ஏதுசெய்யும் திருத்தம்.
  5. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை & வளர்ச்சி ஆணையம் : ஒய்வூதிய நிதியினைத் தகுந்த திட்டங்களில் முதலீடு செய்யவும் அதில் முதலீடு செய்பவர்களின் நிதி பாதுகாப்பை சீரமைக்கவும் ஆணையம் நிறுவுவதற்கானச் சட்டம். பாதிக்கப் பட்டு பனகல் பார்கில் போராடும் முதியவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
  6. விதைகள் மசோதா: தரமான விதைகளை இறக்குமதி, ஏற்றுமதி செய்ய வழிவகுக்க. இதைப் பொதுவாக இடது சாரி கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்கின்றன. காரணம் இது பொதுவாக MNC களுக்கு ஆதரவான சட்டம் என்பதால். PT கத்திரிக்காய் என்று கேள்வி பட்டுள்ளீர்களா?
  7. சுரங்க கனிம முன்னேற்ற மசோதா : சுரங்கத் தொழிலை சீரமைக்க. இத்துறையில் கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை. பெரும்பாலும் இம்மாநிலங்களின் அரசியலையே இவை தான் தீர்மானிக்கின்றன.

இவற்றைத் தவிர நிறுவன சட்டத் திருத்தம், நேர்முக வரி திருத்தம், சேவை வரியில் திருத்தம் என முக்கியமான மசோதாக்கள் சட்டமாக்க் காத்திருக்கின்றன. இதில் முக்கியமாக விடுபட்டது, நில கையகப்படுத்தல் மசோதா, குறிப்பாக மேற்கு வங்கத்தில் த்ரிணாமுல் காங்கிரஸ் இதற்கு எதிராக இருப்பதால் இதை அரசு கையில் எடுக்கத் தயங்குகிறது என்று நினைக்கிறேன். மேலும் உத்திர பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் மாயாவதி இதை காங்கிரஸுக்கு எதிராகப் பயன் படுத்துவார்.

இவற்றைத் தவிர 23 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட உள்ளன. அவற்றுள் முக்கியமானது,
  1. அணுசக்தி சீரமைப்பு ஆணையம் (அணு உலை பாதுகாப்பு, அதன் தொழிலாளர், மக்கள் பாதுகாப்பிற்காக அணுசக்தி பாதுகாப்பு மன்றம் நிறுவப் பட உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாகத் தான் ஏற்கனவே அவர்களின் பொறுப்பிற்கு உச்ச வரம்பு நிர்ணயித்து ஆணை பிறப்பித்தாகி விட்டதே. கண் துடைப்பிற்காக இதையாவது செய்ய வேண்டாமா?
  2. கள்ளப் பணம் தடுப்பு (திருத்தம்) மசோதா :  வெளிநாட்டிளிருந்து வரும் கள்ள பணத்தை தடுக்க முக்கிய தேவை.
  3. தேசிய உணவு பாதுகாப்பு மசோதா :  பொது விநியோக முறையை சீரமைக்க [75% சத கிராம புற மக்களுக்கும் 50% நகர் புற மக்களுக்கும் ரூ.3/-க்கு அரிசியும், ரூ.2/-க்கு கோதுமையும் ரூ.1/-க்கு தானியமும் தருவார்களாம்!!!]

ஆனால் மேற்கூறிய சட்டங்களை விவாத்திது இயற்ற அவர்களுக்கு இருக்கும் கால அவகாசம் எவ்வளவு தெரியுமா? 22 வேலை நாட்கள். ஆக மொத்தம் 54 மசோதாக்களை இதற்குள் விவாதிக்க வேண்டும்.

இவற்றைத் தவிர அரசியலும் உண்டு. ஆம் ஊழல், விலையேற்றம், கருப்புப் பணம் ஆகியவற்றோடு மாயாவதி கொளுத்திப் போட்ட உத்திர பிரதேச பிரிவினை, தெலுங்கானா பிரச்சனை என்று பல உள்குத்து வேளைகளும் உள்ளன. நேற்றைய தினம் விலைவாசி பிரச்சனைபின் அரசின் நிலையை ஓட்டெடுப்பிற்கு விட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்து விட்டன. பாஜாக வேறு சிதம்பரத்தைப் பேச விடுவதில்லை என்று தீர்மாணித்திருக்கிறது. ஆக மேற்கூறிய சட்டங்களில் சில விவாதமின்றியே (அதாவது அதிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றி யாருக்குமே தெரியாமல்) நிறைவேறும். சில எப்போதும் போல அடுத்தக் கூட்டத்தொடருக்குக்காக கிடப்பில் போடப்படும்.   

பின் குறிப்பு:   நாடாளுமன்றம் இழக்கும் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.25000/- நஷ்டம் (அரசு கஜானாவிலிருந்து அதாவது திருவாளர் மக்களின் பணம்).

4 கருத்துகள்:

  1. இன்றும் நடக்கவில்லை.... :( நடக்கவும் விட மாட்டார்கள்..... கஷ்டம்...

    பதிலளிநீக்கு
  2. ////பின் குறிப்பு: நாடாளுமன்றம் இழக்கும் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.25000/- நஷ்டம் (அரசு கஜானாவிலிருந்து அதாவது திருவாளர் மக்களின் பணம்).////

    பாவம் மக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆம். வெங்கட், அப்படித்தான் ஆகும் போலிருக்கிறது. இன்றும் மூன்றாவது நாளாக இதுவரை நடக்கவில்லை; மதியம் 2.30 வரை ஒத்திவைத்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆம் ராஜா, மக்கள் தான் எப்பொழுதுமே பாவப் பட்டவர்கள்.

    பதிலளிநீக்கு