செவ்வாய், டிசம்பர் 18, 2012

ஸிந்து தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


ஸிந்து நதியைப் பற்றிப் புராணங்களிலும் இதிகாசத்திலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. அதேபோல் மேற்கத்திய தேசக் குறிப்புகளும் சிந்துவைப் பற்றிப் பல குறிப்புகள் கூறுகின்றன.

இந்த சிந்து நதியின் மையப்பகுதியில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் இருந்தது தான் இந்த சிந்து தேசம். இது இன்றைய பாகிஸ்தானில் குறிப்பாக வடக்கு முல்தான் பகுதியில் ஆஃப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியாகும். அக்னிபுராணத்தில் பாரத வர்ஷத்தைக் குறிப்பிடும் பொழுது கடலுக்கு வடக்கில் ஹிமாலத்தின் தெற்கே 9000 யோஜனைகள் கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இதன் முக்கிய மலைத் தொடர்களை குலபர்வதம் என்று குறிப்பிட்டு 7 மலைத் தொடர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் பாரியாத்ரம் என்பது ஆரவல்லி மலைத் தொடரைக் குறிப்பதாகும். இந்த ஆரவல்லித் தொடர் பகுதியில் ஸிந்து தேசம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. உலக நாகரிகத் தொடக்கப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விடத்தில் சிறப்பாக ஒரு நாடு இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

ராமாயணத்தைப் பொறுத்தவரை, ராமருக்கு ராகவன் என்ற பெயர் உண்டு. இதன் பொருள் ரகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். காளிதாசரின் ரகுவம்சத்தில் ரகு மஹாராஜர், படலாவதி நதியைக் கடந்து பாரியாத்ரதின் அபராந்த மலை வழியாக பஹாலிக தேசத்தை அடைய சிந்து தேசத்தை கடந்ததாகக் குறிப்பிடுகிறது.

சிந்து தேசம் சில இடங்களில் சிவி(பி) தேசம் என்று சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஸிந்து தேசத்தவர்களுக்கு சைந்தவர் (சிபி வம்சத்தவர்) என்ற பெயரும் உண்டு. சிந்து தேசத்தைத் தோற்றுவித்தவன் சிபி-யின் மகன் வ்ருசத்ரபன் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் தலைநகரம் வ்ருசத்ரபுரம்; இது இன்றைய பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் மிதான்கோட் நகரம்.

மஹாபாரதத்தில் ஸிந்து தேசம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஸிந்து மன்னன் ஜயத்ரதன், துரியோதனனின் சகோதரி துஸ்சலையை மணந்தவன். துஸ்சலையைத் தவிர இவனுக்கு காந்தார காம்போஜ இளவரசிகளும் மனைவியர். பாஞ்சலியை மணக்கப் சுயவரப் போட்டியில் தோற்றவர்களில் இவனும் ஒருவன். அப்பொழுது, பாஞ்சாலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மிகவும் அவமானப் பட்டவன். தொடர்ந்த பகையில் பாஞ்சாலர்கள் மீதும் பாஞ்சாலியை மணந்த பாண்டவர்கள் மீதும் கடும் வன்மம் கொண்டிருந்தான். சக்ர வியூகத்தைப் பிளந்து அதில் நுழைந்த அபிமன்யுவைக் காக்க விழைந்த பாண்டவர்களைத் தான் பெற்ற வரத்தின் உதவியால் தடுத்து, சக்ரவியூகத்தை மூடியவன். மறுநாள், சூரிய அஸ்த்மனத்திற்குள் அவனைக் கொல்ல அர்ஜுனன் சபதம் செய்து அவனைக் கொன்றான்.  ஜயத்ரதனின் தந்தையின் பெயர் வ்ருத்தக்ஷ்ரதன். அவன், தன் மகனின் தலை மண்மீது விழக் காரணமாக இருந்தவன் தலை வெடித்துச் சிதற வேண்டுமென வரம் பெற்றிருந்தான். அர்ஜுனனின் அம்பு ஜயத்ரதனின் தலையைக் கொய்து வ்ருத்தக்ஷ்ரதன் மடியில் விழ, அதிர்ச்சியில் எழுந்த அவன் மடியிலிருந்து ஜயத்ரதனின் தலை மண்ணில் விழ, அவனும் மடிந்ததாக பாரதம் கூறுகிறது. ஜயத்ரதன் சிந்து தேசத்தின் மன்னனாக இருந்தாலும் அவன் கட்டுப்பாட்டில் 10 தேசங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக சிவி வம்சத்தவர் சிவ வழிபாடு செய்பவர்களாக மஹாபாரதமும் மற்றக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. மஹாபாரதத்தில் உபமன்யு என்ற முனிவரைச் சைவ சமயத்தைக் கடைபிடிப்பவர் அதிலும் குறிப்பாக ’முண்டகர்’ (தலையை முழுங்க மழித்தவர்கள்) என்று குறிப்பிடப்படுகிறது. உபமன்யுவின் மகன் அல்லது வம்சத்தவர் தான் சாமவேதத்தில் குறிப்பிடப்படும் ஔபமன்யர் என்று காந்தார தேசத்தின் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தேன். மஹாபாரதத்தில் ஜயத்ரதனும் அவன் தந்தையும் சிவனிடம் வரம் பெற்றதாகவே குறிப்பிடப்படுகிறது. அலெக்ஸாண்டரின் குறிப்புகளிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்களையும் காம்போஜர்களையும் ‘தலை மழித்தவர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது.

அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின் போரஸ் மன்னனின் மகன் கட்டுப்பாட்டில் இருந்த சிந்து தேசம், பின் மௌரியர்களால் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்குப் பின் சுங்க  வம்சத்தின் சுங்க மித்ரன் மற்றும் அவன் மகன் புஷ்யமித்ரன் ஆகியோர் வசம் இருந்ததாக புத்த மத நூல்கள் குறிக்கின்றன.

புத்தமதத்தினரின் ஜாதகக் கதைகளில் சிபி மன்னனின் தலைநகரம் அரிஷ்டபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீன யாத்ரிகர்கள் பாஹியான், க்ஷுவன்சான், யுவான்சுவாங், சாங்யுன் ஆகியோரின் குறிப்புகளில் சிவி வம்சத்தவரை ஒட்ட்யானா பகுதி (ஸ்வாட் பள்ளத்தாக்கிற்குத் தெற்குப் பகுதியைக் குறிக்கும்) என்றுக் குறிப்பிடுகிறார்கள். அரிஷ்டபுரம் க்ரேக்கர்களால் (டால்மி) அரிஸ்டொபொத்ரோ என்று குறிப்பிடுகிறது.

மத்ஸ்ய புராணம் சிந்து நதி சிவபுரம் (சிவிகளின் நகரம்) வழியாகப் பாய்வதாகக் குறிப்பிடுகிறது.

யுவான் சுவாங்-இன் குறிப்புகளில் வசுந்தரன் என்ற போதிச்சத்துவரின் கதைக் குறிப்பிடப்படுகிறது.  ஆனால், அல்-பிருனி இந்த மன்னனை ராஜஸ்தானின் சித்தூரைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார்.

புத்த ஜாதகக் கதைகளில் சிபிக்களின் தலைநகரமாக மற்றொரு நகரமும் குறிப்பிடப்படுகிறது. அது ரோர்கா என்று தற்போது அழைக்கப்படும் ரோரி. பல்லதிய ஜாதகக் கதைகளில் இந்த ரோரியின் அரசனாக ரூரக் என்ற ருத்ராயனன் குறிப்பிடப்படுகிறான். இவன் இஷ்வாகு-வின் வம்சத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். இந்த ரூரக்-இன் மகன் சிகண்டி-யின் (மகாபாரத சிகண்டி அல்ல) காலத்தில் கடும் புயல் அடித்து இந்த நகரம் அழிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சுங்க வம்ச ஆட்சிக்குப் பின்னர் ரோர் (ரூரக்-இன் திரிபு) வம்சத்தவர்களால் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அராபியர்கள் ரோர்-களை ’அரோர்’ என்று அழைத்தனர். அரேபியப் படையெடுப்பிற்குப் பின்னர் அரோர் என்ற பெயரே நிலைத்தது. பஞ்சாபின் அரோரா-க்கள் இவர்கள் வம்சத்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் அரேபியப் படையெடுப்பின் போதே சிந்தி-க்கள் இராஜஸ்தான் ஹரியானா பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹரியானாவின் ஜஜ்ஜர்-களும் சிந்து (சிபி-யின்) வம்சத்தவர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

அன்றும் இன்றும், இந்திய பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக பல சிந்தி-க்கள் இருந்து வந்துள்ளனர்/இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்களாக ஜின்னா, பூட்டோ, கிலானி, ஜியா-உல்-ஹக், க்ருபாளினி, அத்வானி, ஜெத்மெலானி என்று பலரையும் குறிப்பிடலாம்.

6 கருத்துகள்:

  1. சிந்து தேசம் விரிவாக அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அட்டடடா! அப்படியே பழைய சிந்து தேசத்தின் உள்ளே வெண்புரவியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றி வந்த மாதிரி இருக்குதய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துச் சுற்றிப் பார்த்ததற்கு(!!!) நன்றிகள் பத்து!

      நீக்கு